பக்கம் எண் :

சீறாப்புராணம்

1092


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு கற்பிக்க, வெற்றியை யுடையவனான அந்தச் சல்மா னென்பவன் அவர்கள் கொடுத்த தங்கத்தை வாங்கி வெண்ணிறத்தைக் கொண்ட ஓர் வத்திரத்தால் இறுகும் வண்ணம் மூடித் துதிக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் இரு பாதங்களிலுந் தாழ்ந்து அங்கு நெருங்கிய அவர்களின் நேசர்க ளான அசுஹாபிமார்க ளனைவரையும் இனிமையானது நிலைக்கும்படி புகழ்ந்து அழகான துலாவப் பெற்ற தாமரை மலரை நிகர்த்த தனது அடிகளைப் பெயர்த்து எழும்பினான்.

 

2941. கொண்ட றூங்கிய துடவையுங் கனகமுங் கொடுத்து

     மண்டு பூம்பொழிற் பொன்னகர் வாங்கினம் வாய்ப்பத்

     தெண்டி ரைப்புவி யிடத்தினின் முகம்மதைத் தேடிக்

     கண்ட பேறிதென் றுவகையிற் றெருத்தலை கடந்தான்.

50

      (இ-ள்) அவ்வித மெழும்பி மேகங்க ளானவை தூங்கப் பெற்ற அந்த ஈத்த மரச் சோலையையும் தங்கத்தையு மளித்துப் பூஞ்சோலைகள் நெருங்கிய சொர்க்க லோகத்தைச் சிறக்கும் வண்ணம் நாம் வாங்கிக் கொண்டோம். தெள்ளிய அலைகளையுடைய சமுத்திரஞ் சூழ்ந்த இப் பூமியின் கண் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை யாம் தேடிப் பெற்ற பேறானது இஃதென்று சொல்லி வீதியி னிடங்களைத் தாண்டினான்.

 

2942. வருந்தி லாநிதி யளித்துமுன் விலையென வாங்கி

     யிருந்த மன்னவன் மைந்தர்கண் மனையிடத் தேகித்

     திருந்த வாய்புதைத் தடிகள்சொற் படிமுறை சிறியேன்

     பொருந்தி வந்தனன் கொண்மினென் றிசைதரப் புகன்றான்.

51

      (இ-ள்) அவ்வாறு தாண்டி ஆதியில் துன்ப முறாமல் பொன்னைக் கொடுத்துக் கிரய மென்று தன்னை வாங்கி யிருந்த அரசனது புத்திரர்களின் வீட்டின் கண் சென்று செவ்வையாகத் தனது வாயைப் பொத்தித் தலைவர்காள்! உங்களது சொல்லின் பிரகாரம் ஒழுங்கோடும் சிறியே னாகிய யான் இயைந்து வந்தேன். அதைப் பெற்றுக் கொள்ளுங்க ளென்று இனிமையுடன் கூறினான்.

 

2943. கேட்டு மன்னவ ரொல்லையி னெழுந்துகாய் கிளைத்த

     தோட்ட முற்றினுஞ் சுற்றிநன் கெனச்சிரந் தூக்கிக்

     காட்டின் மிக்கநற் றுடவைகைக் களித்தனை கடிதின்

     வேட்ட பொன்னையுந் தருகென வெதிர்விளம் பினரால்.

52