இரண்டாம் பாகம்
2947.
தொண்டே னக்குறித் தாண்டவர்
துடரறத் துடைத்துக்
கொண்டு போனபொன் னினிலணு
வெனுங்குறை யாமற்
றிண்டி றற்புயம் வீங்கிடச்
செழுமுக மிலங்க
வண்ட நாயகன் றூதுவ ரவையிடத்
தானார்.
56
(இ-ள்) அவ்வா றெழும்பித்
தம்மை அடிமை யென்று சொல்லி மதித்து ஆட்சி செய்த அவர்களின் தொடர் பானது அறும் வண்ணம் அழித்துத்
தாம் கொண்டு போன தங்கத்தில் அணுப் பிரமாண மேனுங் குறையாமல் திண்ணிய வலிமையைக் கொண்ட
தோள்களானவை பூரிக்கவும், செழிய வதன மானது பிரகாசிக்கவும், தேவர்களான மலாயிக்கத்து
மார்களின் நாயகனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது
முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களினது சபையின் கண் வந்து சேர்ந்தார்.
2948.
சிறையெ னத்தனி பாண்டவ
ருரைவழி திருந்த
நறைத ருங்கனி பொழிலளித்
தவர்கண்முன் னடுவா
யறைத ருங்கன கத்தினை யளித்துமுன்
னளவாய்க்
குறைவி லாதின்னம் வளர்ந்தபொன்
னிதுவெனக் கொடுத்தார்.
57
(இ-ள்) அவ்வாறு வந்து
தம்மை அடிமை யென்று சொல்லி ஒப்பற்ற ஆட்சி செய்த அவர்களினது வாக்கின் பிரகாரம் செவ்வையாக
வாசனையைத் தரா நிற்கும் பழங்களை யுடைய சோலையைக் கொடுத்து அவர்கள் முன்னர் நீதி யாகச்
சொல்லிய தங்கத்தைக் கொடுத்தும் ஆதியி லிருந்த அளவாகக் குறை வில்லாமல் மேலும் ஓங்கிய தங்க
மானது இது வென்று கொடுத்தார்.
2949.
அடுத்த ளித்தசல் மான்றனை
நோக்கியன் புடனே
தொடுத்த காரிய முடித்தருந்
துன்பமுந் துயரும்
விடுத்த னைப்பதம் படைத்தனை
வீறொடு நிதியு
மெடுத்து நீகொடு போவென
வுரைத்தன ரிறசூல்.
58
(இ-ள்) அவ்வாறு தங்களின்
சமூகத்தை நெருங்கிக் கொடுத்த அந்தச் சல்மா னென்பவரை நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அன்போடும் பார்த்து நீ தொடங்கிய காரியத்தை
நிறைவேற்றி அருமையான வருத்தத்தையும் கிலேசத்தையும் தள்ளினாய். பதவியும் சம்பாதித்தாய்.
ஆதலால் பெருமையுடன் இந்தத் தங்கத்தையு மெடுத்துக் கொண்டு போவாயாக வென்று கற்பித்தார்கள்.
|