இரண்டாம் பாகம்
2950.
இறைய வன்றிருத் தூதுவ ரீந்தபொன்
னதனால்
வறுமை யென்றில நிலத்திடை
வாழுநா ளளவும்
பொறையின் மீதிடுஞ்
சுடரெனத் தீனெனும் பொருட்டா
லுறையும் பாவமற் றமரர்கள்
பதவியுற் றிருந்தார்.
59
(இ-ள்) அன்றியும், யாவற்றிற்கும்
இறைவ னான ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கொடுத்த தங்கத்தினால்
அந்தச் சல்மா னென்பவர் இந்தப் பூமியின் கண் ணிருந்து வாழ்ந்த நாட்கள் வரைக்கும் அவருக்கு
என்றும் தாரித்திர மில்லை. தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது காரணத்தினால்
மலையின் மே லிட்ட தீபத்தைப் போன்று தம்பால் தங்கிய பாவங்க ளற்றுத் தேவர்களான மலாயிக்கத்து
மார்களின் தான மாகிய சொர்க்க லோகத்தைக் கிடைக்கப் பெற் றிருந்தார்.
2951.
பூணுந் தஞ்செல வடங்கலும்
போக்கியும் புகழாற்
பேணு நல்லவர்க் கினிதெடுத்
தருளியும் பெரிதி
னீணி லத்தினி னபிதரு கட்டிமா
நிதிய
மாணு றத்தனி யிருந்தது நாட்குநாள்
வளர்ந்தே.
60
(இ-ள்) அன்றியும், அவர்
பொருந்தா நிற்கும் தமது செலவுகளெல்லாவற்றையும் செலவு செய்து போக்கியும், கீர்த்தியினால்
விரும்பப்பட்ட நல்லவர்களுக்கு இனிமையுடன் அதிகமாய் எடுத்துக் கொடுத்தும், நீண்ட இப் பூமியின்
கண் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்கள்
கொடுத்த பெருமை பொருந்திய அந்தத் தங்கக் கட்டி யானது மாட்சிமை யுறும் வண்ணம் பிரதி தினமும்
பெருகி ஒப்பற இருந்தது.
2952.
மாநி லம்புகழ் முகம்மது நபிபதம்
வழுத்தித்
தீனி லைக்குரி யவரெனப்
பெரும்புகழ் செலுத்தி
யானுங் காவுமொவ் வாதசல்
மானெனு மரசர்
தான மிக்குயர் தலைவரின்
வாழ்ந்திருந் தனரால்.
61
(இ-ள்) அன்றியும், காம
தேனுவும் கற்பகத் தருவு மொப்பாகாத அந்தச் சல்மா னென்று கூறும் மன்னவர் பெருமை பொருந்திய இவ்வுலக
மானது துதிக்கா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் திருவடிகளைப் புகழ்ந்து தீனுல்
இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்க நிலைமைக்குச் சொந்தமானவ ரென்று பெரிய கீர்த்தியை எவ்விடத்தும்
நடாத்தித் தானத்தினால் மிக மேன்மைப் பட்ட தலைமைத் தனத்தை யுடையவராக வாழ்ந்திருந்தார்.
|