பக்கம் எண் :

சீறாப்புராணம்

1116


இரண்டாம் பாகம்
 

3021. மகுசியென் றோதும்வத் தானி னேந்தலு

     மிகுபடைத் தலைவரும் வேறு றாதொரு

     தகைமையிற் பணிவது சரத மின்றுநீ

     ரிகன்மறுத் தணிநகர்க் கெழுக வென்றனன்.

28

      (இ-ள்) அன்றியும், மகுசியென்று கூறா நிற்கும் வத்தான் நகரத்தினது அரசனும் அவரது மிகுந்த சேனைத் தலைவர்களும் வேறுறாது ஒரே தன்மையில் உங்களைப் பணிவது சத்தியம். இன்றைய தினம் நீங்கள் உங்களது போர்த் தொழிலை வெறுத்து அழகிய உங்கள் நகரத்திற்கு எழுந்து செல்லுங்களென்று சொன்னான்.

 

3022. உற்றுறைந் தவனிவ ணுரைத்த வாசகம்

     வெற்றியென் றியனபி போரின் வேட்கையிற்

     சுற்றிய திறற்படைச் சூர ரியாரையு

     மற்றையி னெழுகவென் றேவி னாரரோ.

29

      (இ-ள்) இயல்பை உடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அந்தத் தூதுவன் இவ்விடத்தில் வந்து தங்கி அவ்வாறு கூறிய வார்த்தைகள் நமக்கு வெற்றி யாகும் மென்று சொல்லி யுத்தத் தொழிலின் அவாவினால் அங்கு வளைந்த வலிமையையுடைய படை வீரர்களனை வரையும் இன்றைய தினமே எழுப்புங்க ளென்று ஆக்கியாபித்தார்கள்.

 

3023. இங்கிதத் தொடும்பணிந் திசைத்த தூதுவ

     ணங்கலுழ் நபிமல ரடியி னிற்கரப்

     பங்கயங் குவித்தரும் பதியிற் போயினன்

     றிங்களங் குடையொடு மெழுந்த சேனையே.

30

      (இ-ள்) அவ்வாறு ஆக்கியாபிக்க, இனிமையோடும் பணிந்து துதித்த தூதனாகிய அவன் அழகானது சிந்தா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தாமரைப் புஷ்பத்தை நிகர்த்த பாதங்களில் தனது கைகளாகிய தாமரை மலர்களைக் கூட்டி வணங்கி அருமையான தன் நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தான். இவர்களது சேனையும் அழகிய சந்திர வட்டக் குடையோடும் எழுந்தது.

 

3024. ஓட்டிய செழுமுகிற் கவிகை யூடுற

     நீட்டிய வெண்கொடி நிலவு கான்றிடத்

     தீட்டிய படைக்கலஞ் செறியச் சென்றொரு

     காட்டினி லிறங்கினர் கார ணீகரே.

31