பக்கம் எண் :

சீறாப்புராணம்

1197


இரண்டாம் பாகம்
 

அன்கு அவர்களின் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போவதற்கு இங்கு வந்து தங்கினே னென்று சொன்னார்கள்.

 

3249. தந்தைய ருரைதரத் தரம வீடெனுஞ்

    சிந்தையிற் களித்தொளிர் செவ்வி யோங்கிய

    விந்தெனு நுதன்மனை யிருந்த யாவையு

    மந்திரக் கிழவர்முன் வைத்து நின்றனர்.

209   

      (இ-ள்) தங்கள் பிதா வாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு சொல்ல, பிரகாசியா நிற்கும் அழகானது ஓங்கப் பெற்ற மூன்றாஞ் சந்திர னென்று சொல்லும் நெற்றியை யுடைய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் புண்ணிய வீடென்று கூறுகின்ற தங்களின் மனதின் கண் சந்தோஷ மடைந்து தங்கள் கிரகத்திலிருந்த யாவற்றையும் எடுத்து வேத முதியோர்களான அவர்களின் முன்னர் வைத்து நின்றார்கள்.

 

3250. மாணெழி லரியபீங் காணும் வார்தலை

     காணியும் பாயலுங் கதிர்கொள் வெள்வளைப்

     பாணியிற் றிருகையும் பரம தானியும்

     பூணிழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார்.

210

      (இ-ள்) பூணா நிற்கும் ஆபரணங்களை யுடைய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு மாட்சிமை தங்கிய அழகை யுடைய அருமையான பீங்கானையும், நீண்ட தலைகாணியையும், பாயலையையும், பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய வளையல்களைத் தரித்த கையினது திருகையையும், பரமதானியையும், வைத்த மாத்திரத்தில், அவர்களைத் துதித்து அவற்றை அவர்கள் பார்த்தார்கள்.

 

3251. வயவரி யலிதிரு மனையிற் சேருதற்

    குயர்மறை முகம்மது மொளிர்செங் கையினால்

    வியனுறுந் திருகையை யேந்தி னார்விற

    லியலபூ பக்கரும் பாயை யேந்தினார்.

211

      (இ-ள்) அவ்வாறு பார்த்து மேலான புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களும் பிரகாசியா நிற்குந் தங்களின் செந்நிறத்தைக் கொண்ட கையினால் வீரத்தைப் பெற்ற புலியாகிய அலி யிபுனு அபீத் தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களின் வீட்டிற் சேருவதற்குப் பெருமை பொருந்திய திருகையை எடுத்துத் தாங்கினார்கள். விஜயத்தினது கீர்த்தியைப் பொருந்திய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும் பாயலை எடுத்துத் தாங்கினார்கள்.