இரண்டாம் பாகம்
3252.
உற்றவர்க் குதவிய வுமறு
வெள்ளிழை
நற்றலை யணையினை யேந்தி
னாருயர்
வெற்றிசே ரடலுது மானு மெய்மனப்
பற்றொடு மெடுத்தனர் பரம தானியே.
212
(இ-ள்) தங்களை வந்து சேர்ந்தவர்களுக்கு
உதவா நிற்கும் உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்கள் வெண்ணிறத்தைக் கொண்ட நூலினாற் செய்யப்பட்ட
நல்ல தலைகாணியை எடுத்துத் தாங்கினார்கள். மேலான விஜயமானது சேரப் பெற்ற வலிமையையுடைய உதுமா
னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களும் சத்தியத்தைப் பொருந்திய மனத்தி னன்போடும்
பரமதானியை எடுத்துத் தாங்கினார்கள்.
3253.
கதிர்தரு பெரியபீங் கானைக்
கையினின்
மதிவல ரெனுமு சாமா வெடுத்தனர்
பதுமமென் மலர்முக பாத்தி
மாபதம்
பொதிதரு கபுசுடன் புறப்பட்
டாரரோ.
213
(இ-ள்) அறிவில் வல்லவ
ரென்று கூறா நிற்கும் உசாமா றலி யல்லாகு அன்கு அவர்கள் தங்களின் கையால் பிரகாசத்தைத்
தருகின்ற பெரிய பீங்கானை எடுத்துத் தாங்கினார்கள். மெல்லிய தாமரைப் புஷ்பத்தை நிகர்த்த
வதனத்தை யுடைய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் தங்களின் பாதத்தின்
கண் பொதிந்த கபு சோடும் புறப்பட்டார்கள்.
3254.
வல்லிய மெனுமலி மனையின்
வள்ளலார்
செல்லெனு மொல்லையின் விரைவிற்
சேணிழிந்
தெல்லவன் கதிரினுஞ் சபுற
யீலெழின்
முல்லைவெண் ணகைமயின்
முன்றி னண்ணினார்.
214
(இ-ள்) அவ்வாறு புறப்பட்ட
வள்ளலராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்கள் அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களைப் புலி யென்று கூறா நிற்கும்
அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டின் கண் செல்லுங்ளென்று சொல்லும்
அந்த மாத்திரையில், சூரிய கிரணத்தைப் பார்க்கிலும், பிரகாசத்தைக் கொண்ட ஜிபுரீல லைகிஸ்ஸலா
மவர்கள் வேகத்தில் வான லோகத்தை விட்டு மிறங்கி அழகிய முல்லை மலரை நிகர்த்த பற்களை யுடைய
மயிலாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் வீட்டினது முற்றத்தில் வந்து சேர்ந்தார்கள்.
|