பக்கம் எண் :

சீறாப்புராணம்

1200


இரண்டாம் பாகம்
 

3258. கொணர்ந்தவை யாவையுங் கொடுத்து மன்னவர்

     மணந்தரு மலியையு மயிலன் னாரையு

     மிணங்கிடப் போற்றிவாழ்த் தெடுத்தவ் வில்லிடந்  

     தணந்தவ ரவருறை சார்பிற் சார்ந்தனர்.

218

      (இ-ள்) அரசர்களான அவர்கள் அவ்வாறு தங்கித் தாங்கள் கொண்டு வந்த யாவற்றையுங் கொடுத்து மணத்தைத் தந்த அந்த அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களையும், மயில் போலுஞ் சாயலை யுடையவர்களான பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களையும், இசையும் வண்ணந் துதித்து ஆசீர்வதித்து அந்த வீட்டை விட்டும் நீங்கி அவரவர்கள் தங்குகின்ற தானங்களிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3259. சலிலமுஞ் சீரமுந் தழீஇய தன்மைபோ

     லொலிகடற் புவியினீ டூழி வாழ்கென

     வலியையு மகவையும் வாழ்த்தி யன்பொடு

     மலிபுகழ் முகம்மது மனைபுக் காரரோ.

219

      (இ-ள்) அன்றியும், பெரிய கீர்த்தியை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் நீரும் பாலுங் கலந்த தகைமையைப் போலச் சத்திக்கா நிற்குஞ் சமுத்திரத்தைக் கொண்ட இப் பூமியின் கண் நீண்ட காலம் நீங்கள் வாழக் கடவீர்க ளென்று அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களையும், தங்களின் புதல்வியா ரான பீவி பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களையும், ஆசீர்வதித்து அன்போடுந் தங்கள் வீட்டின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3260. சொல்லுடன் பொருளெனச் சுருதி நூன்முறை

     யில்லுறைந் தொருவருக் கொருவ ரின்பமுற்

     றல்லெனுங் கூந்தலு மரசர் சீயமு

     மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார்.

220

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு போய்ச் சேர, அந்தகார மென்று சொல்லா நிற்கும் கூந்தலை யுடைய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களும், இராஜராகிய யானைகளுக்குச் சிங்கமான அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும், வேத நூற் பிரகாரம் சொல்லுடன் அச் சொல்லினது அர்த்தத்தைப் போலுந் தங்களின் வீட்டின் கண் தங்கி ஒருவருக்கொருவர் இன்பத்தைப் பொருந்தி வளமையைக் கொண்ட அழகிய இப்பூமியின் கண் சந்தோஷத் தோடும் வாழ்ந்திருந்தார்கள்.