பக்கம் எண் :

சீறாப்புராணம்

1202


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேட்டுத் தெரிந்து தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமயினது விஜயத்தைப் பொருந்திய அரசர்களான அசுஹாபி மார்களனைவருக்குங் கூறி வேற்றுமையைக் கொண்ட சத்துராதிகளென்று சொல்லும் அந்தகாரத்தை இல்லாமற் செய்யும் வெவ்விய சூரியனை நிகர்த்த மன்னவராகிய வெற்றியை யுடைய ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்களை அழைத்தார்கள்.

 

3264. புடவியிற் பறப்பன போலு முப்பஃ

     தடல்வயப் பரியுட னயில்வில் லேந்திய

     மிடலுடை வீரர்கள் சிலரும் வெண்ணிலாச்

     சுடர்விடு துவசமுந் தொகுத்திட் டாரரோ.

4

      (இ-ள்) அவ்வாறு அழைத்து அவர்களோடு பூமியினிடத்துப் பறந்து செல்லும் பட்சிகளை நிகர்த்த வலிமையையும் வெற்றியையுமுடைய முப்பது குதிரைகளுடன் வேலாயுதத்தையுங் கோதண்டத்தையுந் தாங்கிய வல்லமையை யுடைய சில வீரர்களையும் வெள்ளிய நிலவினது பிரகாசத்தை வீசுகின்ற கொடிகளையுந் தொகுத்தார்கள்.

 

3265. வயிரொலித் திடப்படை மன்னர் சூழ்வர

     வயிலொடுஞ் சென்றவ ணடர்ந்த பூசகல்

     செயுமமர் வலிகெடச் செயித்து வம்மென

     வுயிரெனுஞ் சிறியதந் தையருக் கோதினார்.

5

      (இ-ள்) அவ்விதந் தொகுத்து நீவிர் ஊது கொம்புகள் சத்திக்கவும், சேனை யரசர்கள் வளைந்து வரவும், வேலாயுதத்தோடும் அந்தச் சீபுல் பகுறு வென்னுந் தானத்தின் கண் போய்ப் பொருது அபூஜகிலென்பவன் விளைக்கின்ற போரினது வல்லமையானது சிதையும் வண்ணம் அவனை வென்று வருவீராக வென்று தங்களின் பிராணனென்று சொல்லா நிற்கும் சிறிய பிதாவாகிய அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களுக்குக் கற்பித்தார்கள்.

 

3266. கருதலர்ச் செகுத்திவண் கடிதின் வம்மென

     வரசர்நா யகநபி யளித்த வாசகஞ்

     சிரசின்மேற் கொண்டமு சாவுஞ் சேணுலாய்

     வரும்விசைப் பெருந்திறல் வாசி மேற்கொண்டார்.

6

      (இ-ள்) சத்துராதிக ளாகிய அந்தக் காபிர்களைக் கொன்று விரைவில் இங்கு வந்து சேருவீராக வென்று இராஜர்களுக்கெல்லாம் நாயகமான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்