இரண்டாம் பாகம்
3273.
உள்ளுறை வஞ்சகத் துறுதி கூறியே
தெள்ளிய னெனவெழுந் தரிதிற்
சென்றுபி
னள்ளிலை வேலபூ சகுலுஞ் சேனையும்
புள்ளுவத் தவர்தலம் புகுத்திப்
போயினான்.
13
(இ-ள்) அவ்வாறு தனது
மனதி னிடத்துத் தங்கிய கபடத்தைப் பொருந்திய உண்மைகளைச் சொல்லித் தான் அறிவுடையோனைப்
போலு மெழும்பி அரிதிற் போய்ப் பின்னர் மாமிசத்தை அள்ளா நிற்கும் இலைகளைக் கொண்ட வேலாயுதத்தை
யுடைய அபூஜகி லென்பவனையும் அவனது சேனைகளையும் வஞ்சகத்தை யுடைய அவர்களினது தானத்தின்கண்
போய்ச் சேரும்படி செய்து தானும் போயினான்.
3274.
தடத்திரட் புயத்தமு சாவுந்
தண்டுறைக்
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கிநீள்
கொடித்திர ளொடுங்குர கதங்கண்
முன்செல
வடற்படை கொடுமதி னாவி
லாயினார்.
14
(இ-ள்) அவன் அவ்வாறு
போக, பெருமை பொருந்திய திரண்ட தோள்களை யுடைய அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களும் தங்களின்
சேனை யானது தங்கிய சமுத்திர தீரமாகிய அந்தச் சீபுல் பகுறுவை விட்டு மகன்று நீண்ட கொடிப்
படையினது கூட்டத்தோடும் குதிரைப் படையானது முன்னாற் செல்லும்படி வெற்றியையுடைய காலாட்
படையைக் கொண்டு திரு மதீனமா நகரத்தின் கண் வந்து சேர்ந்தார்கள்.
3275.
எறிதிரைக் கடற்கரை யிடத்திற்
சென்றதுஞ்
செறுநர்வந் துற்றது மசுதி செய்கையு
முறைமையின் முகம்மது முன்பு
கூறினார்
சிறியதந் தையரெனுஞ் செவ்விச்
சீயமே.
15
(இ-ள்) அவ்விதம் வந்து
சேர்ந்த சிறிய பிதா வென்று சொல்லா நிற்கும் அழகிய சிங்க மான அந்த ஹம்சா றலி யல்லாகு
அன்கு அவர்கள் தாங்கள் அலைகளை வீசுகின்ற சமுத்திர தீரமாகிய அந்தச் சீபுல் பகுறு வென்னுந் தானத்தின்
கண் போய்ச் சேர்ந்ததையும் அங்குச் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள் வந்து சேர்ந்ததையும்
மசுதிய் யென்பவனின் செய்கையையும் ஒழுங்கோடும் நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின்
சந்நிதானத்திற் சொன்னார்கள்.
|