பக்கம் எண் :

சீறாப்புராணம்

1206


இரண்டாம் பாகம்
 

புவாத்துப் படலம்

 

கலிவிருத்தம்

 

3276. சீபுல்ப குறுவெனுந் தலத்தின் செய்தியைக்

     காவலர் முகம்மதங் கறிந்து கல்விசேர்

     நாவல ருடனினி திருக்கு நாளினில்

     வேவுகொண் டொருவர்வந் திறைஞ்சி விள்ளுவார்.

1

      (இ-ள்) இராஜ ராகிய நாயகம் செய்யிதுல் முறுசலீன் ஷபீவுல் முதுனபீன் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சீபுல் பகுறு வென்று சொல்லும் அவ்விடத்தினது சமாச்சாரத்தைத் தெரிந்து கல்வி யானது பொருந்தப் பெற்ற பண்டிதர்களான அசுஹாபிமார்களோடு அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் இனிமையுடனிருக்கின்ற காலத்தில், தூதினது சமாச்சாரத்தைக் கொண்டு ஒரு தூதுவர் வந்து தொழுது சொல்லுவார்.

 

3277. முன்னர்நம் முன்னல மொழிந்த பூசகல்

     தன்னுடன் பொருந்தியங் கவனைத் தப்பவிட்

     டொன்னலர் தமக்குயி ருடலும் போன்றவ  

     னின்னைநாட் புவாத்துவி னிருக்கின் றானென்றார்.

2

      (இ-ள்) ஆதியில் நம் முன் நலத்தைக் கொண்ட வார்த்தைகளைப் பேசிப் பின் அபூஜகி லென்பவனோடு சேர்ந்து அவனை அந்தச் சீபுல் பகுறு வென்னுந் தானத்தின் கண் தவறிப் போகும்படி விடுத்துச் சத்துராதிகளாகிய காபிர்களுக்குச் சீவனையுந் தேகத்தையும் நிகர்த்தவனாகிய அந்த மசுதிய் யென்பவன் இப்போது புவாத் தென்னு மூரிலிருக்கின்றா னென்று சொன்னார்.

 

3278. ஒற்றர்வந் துரைத்தவை யுணர்ந்து நந்நபி

     நற்றவ முடைமையீர் நன்று நன்றுநம்

     வெற்றிசே ரியார்களும் பரியின் வீரரு

     மிற்றையிற் பகற்பொழு தெழுக வென்றனர்.

3

      (இ-ள்) தூத ராகிய அவர் வந்து அவ்வாறு கூறிய வார்த்தைகளை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தெரிந்து அங்கிருந்த சபையோர்களைப் பார்த்து நல்ல தவத்தினது பாக்கியத்தை யுடைய சஹாபாக்களே! இவ் வார்த்தைகள் மிகவும் நல்லதே; விஜயத்தைப் பொருந்திய நமது நான்கு யார்களும்