பக்கம் எண் :

சீறாப்புராணம்

1207


இரண்டாம் பாகம்
 

குதிரை வீரர்களும் இன்றையப் பகற் பொழுதே யுத்தத்திற்காக எழும்புங்க ளென்று கட்டளை செய்தார்கள்.

 

3279. அகிலமன் புறுமதி னாவுக் காதியாச்

     சகிமன சாயிவைத் தனிய தாகவைத்

     திகல்படைக் கோலங்க ளியற்றி யாவரும்

     புகழ்நபி முகம்மது புறத்தி லாயினார்.

4

      (இ-ள்) அவ்வாறு கட்டளை செய்ய, இவ்வுலகமானது அன்புறா நிற்கும் திரு மதீனமா நகரத்திற்குப் பொறுக்கின்ற இதயத்தையுடைய சாயி வென்பவரை இராஜராக ஏகமாய் வைத்து அனைவரும் விரோதத்தைக் கொண்ட யுத்தக் கோலங்களைத் தரித்துக் கீர்த்தியையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் பக்கத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

3280. அறைதவில் பேரிகை முரசு மார்த்தெழ

     முறைமுறை கொடிப்படை படர்ந்து முன்செலச்

     சுறவெனும் வீரரும் பரியுந் துன்னவே

     யிறைநபி முகம்மது மெழுந்து போயினார்.

5

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர, அடிக்கின்ற தவில்களும் பேரிகைகளும் முரசங்களும் சத்தித்து ஓங்கவும், கொடிப் படைகள் வரிசை வரிசையாகப் பரவி முன்னாற் செல்லவும், சுறவென்று சொல்லா நிற்கும் அசுஹாபிகளான காலாட் படையும் குதிரைப் படையும் நெருங்கி வரவும், கடவுளான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் நபியாகிய நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் எழும்பிச் சென்றார்கள்.

 

3281. உண்ணுநீர் காவத முலவித் தேடினுங்

     கண்ணினிற் காண்பரி தான கானகம்

     விண்ணினிற் புதுப்புன லன்றி வேறொரு

     மண்ணினிற் கூவலி லாப்பு வாத்துவே.

6

      (இ-ள்) அவ்வாறு சென்று அருந்தா நிற்கும் ஜலத்தைக் காத வழிதூர முலாவித் தேடினாலுங் கண்களில் காண்பதற் கருமையான காடாகிய ஆகாயத்தினிடத்துள்ள புதிய மழை ஜலமே யல்லாமல் அப்பூமியின் கண் வேறொரு கிணறு மில்லாத புவாத் தென்னும் பெயரை யுடையது.

 

3282. தொடரறுங் கேண்மையின் மசுதிய் யென்னுமக்

     கொடிய வனுறைந்தபு வாத்துக் கோட்டையைச்

     சடிலமுஞ் சேனையுஞ் சதுரின் சுற்றிட

     வடிவுறு நபியவண் வைகி னாரரோ.

7