பக்கம் எண் :

சீறாப்புராணம்

1209


இரண்டாம் பாகம்
 

யுடைய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கேட்ட மாத்திரத்தில், அந்தச் சாபிர் றலி யல்லாகு அன்கு அவர்கள் மூடிய குடங்களிலும் துருத்திப் பைகளிலுந் தேடியு மில்லாமல் எண்திசைகளிலும் அத் திசைகளிலுள்ள சிற்றூர்களிலும் விரைந்து சென்று பார்த்தும் நீரானது தங்கப் பெற்ற ஓர் தானத்தையுங் கண்டிலர்.

 

3286. மீண்டனர் சடுதியின் வேத நாயக

     கூண்டவிப் பதிபுறங் குறுகி யெங்கணுங் 

     காண்டில னீரெனக் கழற நந்நபி

     யீண்டுநீர்த் துருத்தியைக் கொணர்மி னென்றனர்.

11

      (இ-ள்) அவ்வாறு காணாதவ ராகி விரைவில் திரும்பி வந்து வேதங்களுக் கெல்லாம் நாயகமான நபிகட் பெருமானே! நாம் வந்து கூடிய இந்தப் புவாத் தென்னும் நகரத்தினது பக்கங்களில் யான் சென்று எவ்விடத்துந் தேடியும் நீ ரான திருக்கப் பெற்ற ஓர் தானத்தையுங் கண்டிலேனென்று கூறி, நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் நீவிர் இங்கு நீர்த் துருத்தியைக் கொண்டு வாரு மென்று கட்டளை யிட்டார்கள்.

 

3287. தருகெனு முறைவழி சாபி றொல்லையிற்

     பருகுநீ ரற்றதோற் றுருத்திப் பையினைத்

     திருமுனம் வைத்தனர் தொட்டுச் செவ்வியோர்

     சுருதிமந் திரத்தினிற் றுவாச்செய் தாரரோ.

12

      (இ-ள்) அவ்வாறு கொண்டு வந்து கொடுமென்று சொல்லிய வார்த்தையின் பிரகாரம் அந்தச் சாபிறு றலி யல்லாகு அன்கு அவர்கள் அருந்தா நிற்கும் நீரில்லாத தோலினாற் செய்யப்பட்ட அத் துருத்திப் பையை விரைவில் அவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில் கொண்டு வந்து வைத்தார்கள். உடனே நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அப்பையைத் தங்களின் கைகளினாற் றீண்டிப் புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனத்தால் துஆச் செய்தார்கள்.

 

3288. மண்ணுறும் பாண்டமொன் றெடுத்து வம்மென

     வண்ணலா ருரைத்தலு மோடி யவ்வயின்

     றண்ணுறுந் தொடைப்புய சாபிர் மன்னவ

     ருண்ணிறை களிப்பொடு முவந்து வைத்தனர்.

13