பக்கம் எண் :

சீறாப்புராணம்

1222


இரண்டாம் பாகம்
 

3325. என்றவ னுரைத்தன னேகன் றூதுவர்

     வென்றிகொ ளறபியை விளித்துச் சேணிடை

     நின்றவத் தருவினைக் கூவி னின்னிடத்

     தொன்றுமென் றிசைதர வுரைத்திட் டாரரோ.

30

      (இ-ள்) என்று அவன் கூற, ஒப்பற்றவ னான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வெற்றியைக் கொண்ட அந்த அறபியைக் கூப்பிட்டுத் தூரத்தில் நின்ற ஓர் மரத்தைச் சுட்டிக் காட்டி அந்த மரத்தை நீ கூப்பிட்டால் அஃது உன்னிடத்தில் வந்து சேரு மென்று கீர்த்தி யோடுஞ் சொன்னார்கள்.

 

3326. தூதுவ ருரைவழி யறபி தூரத்தின்

     மாதரு நிலையினை நோக்கி வாவெனக்

     கோதறக் கூறினன் கூற வத்தருப்

     பூதலம் விரிதரப் புறத்தெ ழுந்ததால்.

31

     (இ-ள்) றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய சொல்லின் பிரகாரம் அந்த அறபி யானவன் தூரத்தில் நின்ற பெருமை பொருந்திய அந்த மரத்தைக் களங்கமறப் பார்த்து வாவென்று கூப்பிட்டான். அவ்விதம் கூப்பிட இப் பூமியினிடமானது விரியும் வண்ணம் அம் மரமானது புறத்திலெழும்பிற்று.

 

3327. எழுந்தருப் பணர்சினை யாவும் பின்னரின்

     விழுந்திட வேரைமுன் னீட்டி மேதினி

     யழுந்திட வூர்ந்ததி சயிப்ப வாசலச்

     செழுந்தொடைப் புயநபி திருமுன் னின்றதே.

32

      (இ-ள்) அவ்வாறு எழும்பிய அம் மரமானது தனது கொம்புகளும் கிளைகளும் பின் பக்கத்தில் விழும் வண்ணம் வேரை முன்னால் நீட்டி இப் பூமியானது அழுந்தத் தவழ்ந்து அங்கு நின்ற யாவர்களும் ஆச்சரியப்படும்படி மதுவைக் கொண்ட செழிய புஷ்ப மாலையைத் தரித்த தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தின் கண் வந்து நின்றது.

 

3328. வந்துநின் றத்தரு மண்ணுள் ளோர்களு

     மந்தரத் தமரருங் கேட்ப தாகவே

     சுந்தரம் பெறசலாஞ் சொல்லி யிந்நிலத்

     துய்த்தன னெனக்கலி மாவு மோதிற்றே.

33