இரண்டாம் பாகம்
பத்னுன்னகுலாப் படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
3337.
மழைதவழ் கவிகை வள்ளன் முகம்மது
தீனைப் போற்றி
யெழில்பெறு மப்துல் லாவு மெண்மருங்
கூண்டு சுற்றிச்
சுழியெறி யாறுங் கானுஞ்
சுரங்களுங் கடந்து செந்தேன்
பொழிதரக் கனிக டூங்கும்
பொழிலிடை யிறங்கி னாரால்.
1
(இ-ள்) மேகங்களால்
தவழப் பெற்ற குடையை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் முறுசலீன்
ஷபீவுல் முதுனபீன் ஹபீபு றப்பில் ஆலமீன் ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களின் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தைப் புகழ்ந்து அழகைப் பெற்ற அப்துல்லா
றலி யல்லாகு அன்கு அவர்களும் முஹாஜிரீன்களாகிய எட்டுப் பெயர்களும், ஒன்று சேர்ந்து சுற்றிச்
சுழிகளை வீசுகின்ற நதிகளையும், காடுகளையும், பாலை நிலங்களையும் தாண்டிச் செந் நிறத்தைப்
பொருந்திய மதுவானது சிந்தும் வண்ணம் பழங்கள் தொங்குகின்ற ஓர் சோலையின் கண் வந்து இறங்கினார்கள்.
3338.
நபிதமை விடுத்து மூன்றா நாளினி
லிறங்குங் காவிற்
கவினுற வெழுதிக் கட்டித்
தருங்கடு தாசை யேந்திப்
புவிபுக ழப்துல் லாநற் புரவல
ரெவருங் கேட்டுச்
செவியினின் மகிழ்ச்சி
கூரத் தெரிதர வாசித் தாரால்.
2
(இ-ள்) நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை விட்டு அவ்வாறு மூன்றா
நாளி லிறங்கிய அந்தச் சோலையி னிடத்து அந்நபிகட் பெருமானவர்கள் அழகு பொருந்தும் வண்ணம்
வரைந்து கட்டிக் கொடுத்த அந் நிருபத்தை இவ்வுலகமானது துதிக்கா நிற்கும் அவ்வப்துல்லா றலி யல்லாகு
அன்கு அவர்கள் தங்களின் இரு கைகளாலுந் தாங்கிய நன்மை பொருந்திய அரசர்களான அந்த முஹாஜிரீன்க
ளனைவருங் காதுகளினாற் கேள்வி யுற்றுச் சந்தோஷ மடையத் தெரியும் படி வாசித்தார்கள்.
3339.
மக்கநன் னகரார் சாமுக்
கனுப்பிய முதலு மற்று
மிக்கவத் திரியு மாவு மீண்டவண்
வருநாண் மட்டும்
புக்கியங் குறைந்து கானிற்
போவதற் கிடங்கொ டாமற்
றிக்கறப் பறித்து வெட்டித்
திரும்புமென் றிருந்த தன்றே.
3
|