பக்கம் எண் :

சீறாப்புராணம்

1227


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வாசிக்க, அதில் நன்மை பொருந்திய திருமக்கமா நகரத்தினது காபிர்கள் ஷா மிராச்சியத்திற் கனுப்பிய மிகுத்த முதலும் ஒட்டகங்களும் குதிரைகளும் பிறவுந் திரும்பி அங்கு வருகின்ற நாள் பரியந்தம் நீங்கள் அவ்விடத்திற் போய்த் தங்கியிருந்து அவர்களுக்குக் காட்டி னிடத்துச் செல்வதற் கிடங் கொடாமல் ஆதரவறும் படி வலாற்காரமாய் அவைகளை கவர்ந்து அவர்களை வெட்டி மீண்டு வாருங்க ளென்று எழுதி யிருந்தது.

 

3340. விரிந்தவா சகத்தைக் கேட்டு விரைந்தெழுந் தரச ரியாரும்

     பரிந்ததா யிபுக்கு மக்க மெனும்பதி தனக்கு நாப்பண்

     வரந்தரு நயினார் சொன்ன பத்துனு னகுலா வென்னும்

     புரந்தனி லிறங்கிப் பாதைப் புறந்தொறுங் காவல் வைத்தார்.

4

      (இ-ள்) அவ்வாறிருந்த விரிந்த அந்த வாசகத்தை இராஜர்களான அந்த முஹாஜிரீன்க ளனைவருங் கேள்வி யுற்று விரைந்து எழுந்து சென்று யாவராலும் அன்புறப் பெற்ற தாயி பென்னும் நகரத்திற்கும் திரு மக்க மென்று சொல்லும் பட்டினத்திற்கும் மத்தியில் தங்கிய வரத்தை யருளுகின்ற நயினாரான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கூறிய அந்தப் பத்னுன் னகுலா வென்னு மூரி லிறங்கிப் பாதைகளின் பக்கங்க ளெல்லாவற்றிலுங் காவல் வைத்தார்கள்.

 

3341. பாயரி போன்று சின்னாட் பாதைகாத் திருப்பச் சாமிற்

     போயின சரக்கு மாவு மொட்டகைக் குழுவும் பொங்கித்

     தாயுபுக் கிப்பாற் பட்ட தெனுங்குறிப் பறிந்து தத்தி

     மாயுத மெடுத்தச் சேர்த்துப் புரவிமே லாயி னாரால்.

5

      (இ-ள்) அவ்வாறு அவர்கள் தாவிச் சாடா நிற்குஞ் சிங்கத்தை நிகர்த்துச் சில தினமாகப் பாதைகளைக் காத்துக் கொண்டிருக்க, ஷாமிராச்சியத்திற்குச் சென்ற சரக்குகளும் குதிரைக் கூட்டங்களும் ஒட்டகைக் கூட்டங்களு மதிகரித்துத் தாயிபு நகரத்திற் கிப்பால் வந்து சேர்ந்தன வென்று சொல்லுங் குறிப்பை யுணர்ந்து தங்கள் தங்களின் ஆயுதங்களை எடுத்துத் தரித்துக் கொண்டு குதிரையின் மீதேறினார்கள்.

 

3342. பொன்னுநன் மணியுந் தூசும் புரவியொட் டகத்தி னேற்றிக்

     கொன்னுறைக் கதிர்வா டாங்கிக் குமரரும் வருத னோக்கி

     மின்னிலங் கியவேற் செங்கை முகம்மது விடுத்த வேந்தர்

     பன்னக நெளியத் தத்தம் பரியொடு மெதிர்ந்து கொண்டார்.

6