இரண்டாம் பாகம்
3345.
மருவல னம்றென் போனு மாண்டபி
னிருவர் தாக்க
விருவருக் கிருவ ரேகி யெதிர்ந்துமற்
போரிற் சேர்ந்து
தரையிடை வீழ்த்தி வௌவிக்
கட்டுத றனைக்கண் டேங்கி
யொருவனு மோடி னான்மற் றுளர்திசை
சிதறி னாரால்.
9
(இ-ள்) சத்துராதியான
அந்த அம் றென்று சொல்லப் பட்டவனும் அவ்வாறு வெட்டுண்டு மடிந்த பிற்பாடு இரண்டு காபிர்கள்
வந்து எதிர்த்துத் தாக்க, அந்த இரு காபிர்களுக்கு மிங்கிருந்து இருவர் சென்று அவர்களை எதிர்த்துச்
சேர்ந்து மல்யுத்தத்தினால் பூமியின் கண் விழச் செய்து பிடித்துக் கட்டுவதைப் பார்த்துப்
பயந்து எஞ்சி நின்ற ஒரு தலைவனு மோடினான். அங்குள்ள மற்ற காபிர்களும் எண்டிசைகளிலுஞ் சிதறியோடினார்கள்.
3346.
தாரையி னெதிர்ந்த நான்கு
தலைவரி னொருவன் வீந்தான்
வீரர்க ளிருவர் தீனின் வேந்தர்கை
யினிற்கட் டுண்டார்
போரெதி ராது மற்ற
வொருவனும் புறத்திற் போனான்
வாருதி போல வந்தோர் திசைதிசை
மறுகி னாரால்.
10
(இ-ள்) அவ்வாறு பாதையின்
கண் வந்து எதிர்த்த காபிர்களாகிய நான்கு தலைவர்களில் ஒருவனான அம் றென்பவன் மாண்டான்.
வீரர்களாகிய இரு தலைவர்கள் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது அரசர்களின் கைகளாற்
கட்டுண்டார்கள். மற்ற ஒரு தலைவனும் யுத்தத்தி லெதிர்த்துச் சண்டை செய்யாமற் பின்னாலோடிப்
போனான். சமுத்திரத்தைப் போலும் வந்தவர்களான மற்றக் காபிர்கள் நாளா திக்குகளிலுஞ் சுழன்று
விரைந்து சென்றார்கள்.
3347.
ஒட்டகத் திரளு மேறும்
புரவியு மொளிரச் சேர்த்த
பெட்டகத் தொகையுஞ் செல்ல
பிடித்தவ ரிருவர் செங்கைக்
கட்டுட னடத்திச் செவ்வேற்
காளைய ரினிது சூழ
மட்டவி ழலங்கற் றிண்டோண்
மன்னவர் புறப்பட் டாரால்.
11
(இ-ள்) அவர்கள் அவ்விதம்
விரைந்து செல்ல, ஒட்டகக் கூட்டமும், எருதுக் கூட்டமும், குதிரைக் கூட்டமும், அவைகளிற் பிரகாசிக்கும்
வண்ணஞ் சேர்த்து ஏற்றிய பெட்டகங்களின் தொகையும் வரும் வண்ணந் தாங்கள் சிறையாகப் பிடித்த
இரு தலைவர்களையும் அவர்களின் செந்நிறத்தைக் கொண்ட கரங்களினது கட்டோடும் நடத்திக் கொண்டு
சிவந்த வேலாயுதத்தைத் தாங்கிய காளையர்களான முஹாஜீரீன்கள் இனிமையுடன் பக்கங்களிற் சூழ்ந்து
வர, தேனைக் கொண்ட விரிந்த புஷ்ப மாலையைத் தரித்த திண்ணிய தோள்களை யுடைய
|