பக்கம் எண் :

சீறாப்புராணம்

1316


இரண்டாம் பாகம்
 

3592. புவியினிற் புதுமைக் காரண மதீனா

          புரத்தினி லுறைந்தவ ரெவரு

     மபூசகல் படைகொண் டெதிர்ந்திறந் தனனென்

          றழகுறு வாசகம றிந்து

     நபிதிரு மகளா ரடைந்தன ரெனுமந்

          நடுக்கமுங் கலக்கமு மகற்றிக்

     கவலுதற் கரிய வாநந்தப் பெருக்கின்

          களிக்கடல் குளித்துமூழ் கினரால்.

241

      (இ-ள்) அவர் அவ்வாறு கொடுக்க, இப் பூலோகத்தில் அற்புதத்தினது காரணங்களையுடைய திரு மதீனமா நகரத்தின் கண் தங்கி யிருந்தவர்களான யாவர்களும் அபூஜகிலென்பவன் தனது சேனையைக் கொண்டு வந்து எதிர்த்து மாண்டானென்று  அவ்வோலையி லெழுதியிருந்த அழகு பொருந்திய சமாச்சாரத்தைத் தெரிந்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது புதல்வியான அழகிய றுக்கையா றலியல்லாகு அன்ஹா அவர்கள் மரித்துச் சொர்க்க லோகத்திற் போய்ச் சேர்ந்தார்க ளென்று சொல்லும் அந்த நடுக்கத்தையும் சஞ்சலத்தையும் ஒளித்துச் சொல்லுதற்கரிய ஆனந்தப் பெருக்கைக் கொண்ட சந்தோஷ சமுத்திரத்தில் குளித்து முங்கினார்கள்.

 

3593. பதுறெனும் புடவி வரையடி விடுத்தம்

          மாற்றல ரிடத்தினிற் பறித்த

     கதிர்கொளுந் துல்புக் காறெனும் வாளைக்

          கரதலத் தெழிறர வேந்திக்

     கொதிநுனை வடிவேன் மன்னவர் சூழக்

          குதிரையின் றொகுதிக ளீண்ட

     வதிர்முர சமும்பே ரிகைகளு மார்ப்ப

          வகுமது நபியெழுந் தனரால்.

242

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு முங்கியிருக்க, அஹ்மதென்னுந் திரு நாமத்தையுடைய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பதுறென்று சொல்லுந் தானத்தினது மலையின் அடிவாரத்தை விட்டு அந்தச் சத்துராதிகளாகிய காபிர்களிடத்திலிருந்து பறித்த பிரகாசத்தைக் கொண்ட துல்புகாறென்று கூறும் வாளாயுதத்தை அழகாகக் கைத்தலத்தில் தாங்கிக் கொண்டு கொதிக்கின்ற நுனியையும் கூர்மையையுமுடைய வேலாயுதத்தைப் பெற்ற அரசர்களான யார்களும் சஹாபாக்களுஞ் சூழவும், குதிரைகளின் கூட்டங்கள் நெருங்கவும், ஒலிக்கின்ற முரசங்களும் பேரிகைகளுஞ் சத்திக்கவும் எழும்பினார்கள்.