பக்கம் எண் :

சீறாப்புராணம்

1328


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அன்றியும், யான் பிரயோசனமில்லாமல் அவர்களது பிராண னிறப்பதற்குப் பொருந்தினேன். அணிதற்கரிய பழியென்று சொல்லும் பாரத்தையுஞ் சுமந்தேன். வெட்கத்தையும் விழுத்தினேன். இகழ்ச்சிக்கும் ஆளாயினேன். என்னைப் புருடர்களில் வலியவனென்று சொல்லவும் வேண்டுமா? வேண்டாம்.

 

3619. உதவிசெய் பவர்க்குயி ருதவி செய்குதல்

     விதியுயி ருதவியின் வீழ்த்தி நின்றவர்க்

     கிதமுறப் பழிகொளா திருத்த லும்பரின்

     பதவியு மிலையிவண் பலனு மில்லையால்.

12

      (இ-ள்) அன்றியும், ஒத்தாசை செய்பவர்களுக்கும் பிராணனாலும் ஒத்தாசை செய்வது வேதாகமமுறை. ஒத்தாசையினால் தங்களது பிராணனைக் கொடுத்து நின்ற அவர்களுக்காக மகிழ்ச்சியுறும் வண்ணம் பழிவாங்காமலிருப்பதால் எனக்கு தேவலோகத்தினது மோட்சமுமில்லை. இந்தப் பூமியிலும் ஒரு பிரயோசனமு மில்லை.

 

3620. போருறும் பெரும்படை யுடனும் புக்கியச்

     சேரல ரணிகெடச் சிதைத்துத் தீனெனும் 

     வேரற முகம்மதை வீழ்த்திடே னெனிற்

     பாரிதன் முகத்தினைப் பார்ப்ப தில்லையால்.

13

      (இ-ள்) ஆதலால் யான் யுத்தத்திற்குப் பொருந்திய பெரிய சேனைகளோடும் அங்கு போய்ச் சேர்ந்து அந்தச் சத்துராதிகளது அணியானது கெடும் வண்ண மழித்துத் தீனென்று சொல்லும் வேரானது அறும்படி அந்த முகம்மதென்பவனைப் பூமியில் வீழ்த்திக் கொல்லேனாகில் நான் எனது மனைவியின் முகத்தை நோக்குவதில்லை.

 

3621. வாரியின் பெருங்கிளை மலிவி னாலுமிப்

     பாரினிற் பலபொருள் படைத்த மாண்பினுங்

     கூரும்வை வேற்படைக் கூட்டத் தாலுந்தன்

     வீரியத் தினுமிவை விளம்பி னானரோ.

14

      (இ-ள்) அவன் சமுத்திரத்தை நிகர்த்த தனது பெரிய குடும்பத்தினது பெருக்கத்தாலும், இந்தப் பூமியின்கண் அனேக திரவியங்களைச் சம்பாதித்த பெருமையாலும், மிகுத்த கூர்மையையுடைய வேலாயுதத்தைத் தாங்கிய சேனையினது கூட்டத்தாலும், தனது வல்லமையினாலும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.