பக்கம் எண் :

சீறாப்புராணம்

1334


இரண்டாம் பாகம்
 

என்று வீட்டில் தங்கிய பெண்களுக்குச் சொல்லி எழுந்து அரிதில் அங்கு வந்து ஒளிவை விழுங்கிய அந்த அந்தகாரத்தின்கண் பார்த்தான்.

 

3641. கலைப்பவ னெனவருங் கறுபு மைந்தனைத்

     தலைக்கடைக் கண்டுகை பிடித்துத் தானுறை

     யிலத்தினிற் கொண்டுசென் றிருத்தி யின்புறு

     நலத்தொடுஞ் சுவையொடும் பொசிப்பு நல்கினான்.

34

      (இ-ள்)  அவ்வாறு பார்த்த அவன் கலைப்பவனென்று வந்த அந்த ஹறுபென்பவனது புதல்வனாகிய அபாசுபியா னென்பவனைத் தலைவாசலிற் கண்டு அவனது கையைப் பற்றித் தானிருந்த வீட்டிற் கூட்டிக் கொண்டு போய் உட்காரும்படி செய்து சந்தோஷத்தைப் பொருந்திய நன்மையுடன் இனிமையோடும் உணவுகளைக் கொடுத்தான்.

 

3642. உண்டிலை தின்றபி னுறுதி யாகவிம்

     மண்டலத் துளவையு முகம்ம தென்னும்பேர்

     கொண்டவற் குறும்படைக் குறிப்புங் கொள்கையும்

     விண்டெமக் குரையென விளம்பி னானரோ.

35

      (இ-ள்) அவன் அவ்வாறு கொடுக்க, அந்த அபாசுபியா னென்பவன் அவைகளைப் புசித்துத் தாம்பூலமருந்திப் பின்னர் உண்மையாக நீ இந்த மதீனமா நகரத்தினது உட்காரியங்களையும், முகம்மதென்று சொல்லும் நாமத்தைப் பெற்றவனுக்குப் பொருந்திய சேனையினது குறிப்பையும் அவனது கோட்பாட்டையும் உனது வாயைத் திறந்து எமக்குச் சொல்லென்று கேட்டான்.

 

3643. முகம்மதின் மார்க்கமும் வலியும் வெற்றியு

     மிகலவர் பணிவும்போ ரியற்றுஞ் செய்கையும்

     பகைபிறி திலையெனப் பகரும் பெற்றியும்

     வகைவகை தெரிதர மசுக்கஞ் சொல்லினான்.

36

      (இ-ள்) அவன் அவ்வாறு கேட்க, அந்த மசுக்கமென்பவன் நாயகம் நபி முகம்மது றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையும், அவர்களது வல்லமையையும், விஜயத்தையும், சத்துராதிகளான காபிர்களது தாழ்தலையும், யுத்தஞ் செய்கின்ற செய்கையையும், வேறு விரோதமில்லை யென்று சொல்லா நிற்குந் தன்மையையும் தரந்தரமாக விளங்கும்படி சொன்னான்.