பக்கம் எண் :

சீறாப்புராணம்

1336


இரண்டாம் பாகம்
 

கொண்டு சில வீரர்களோடும் ஒளிவைக் கொண்ட அயிலுடனும் வேலுடனும் வீரத்தைத் தருகின்ற வாளுடனும் சொல்லுதற்கரிய அந்த இராப்போதில் எவ்விடத்தும் பரவிச் சென்றார்கள்.

 

3648. பரிகளைக் கங்குலிற் கரந்து பற்றியும்

     நிரைகளிற் றொறுவரை நெருக்கித் தாக்கியும்

     விரைவொடு மெதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியுந்

     தெரிதரா தொளித்தருங் குறும்பு செய்தனர்.

41

      (இ-ள்) அவ்வாறு சென்ற அவர்கள் இராக்காலங்களிலொளித்துக் குதிரைகளைப் பிடித்தும், பசுக்கூட்டங்களையுடைய இடையர்களை நெருக்கி அடித்தும் வேகத்தோடும் எதிர்த்தவர்களது சிரங்களைப் பூமியில் விழச் செய்தும், ஒருவருக்குந் தெரியாது ஒளித்து அரிய பொல்லாங்குகளைச் செய்தார்கள்.

 

3649. கல்லடர் பொருப்பிடைக் காலிக் காரரும்

     பல்லருந் திரிதரும் பாதை யோர்களு

     மெல்லையிற் சிறுகுடி யிருக்கின் றோர்களுஞ்

     சில்லறை பெரிதென நபிமுன் செப்பினார்.

42

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் செய்ய, கற்கள் நெருங்கிய மலைகளினிடத்துள்ள பசுக்களையுடைய இடையர்களும் பலபேருந் திரிகின்ற பாதைகளிலுள்ளவர்களும் அளவில்லாத சிறிய ஊர்களிலிருக்கப்பட்டவர்களும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தில் வந்து சத்துராதிகளாகிய காபிர்களது உபத்திரவம் பெரியதாயிருக்கிறதென்று சொன்னார்கள்.

 

3650. தேங்கமழ் தெரியலா ரீதென் செய்கையென்

     றாங்குறு மொற்றரை யறியக் கேட்டலும்

     பூங்கழ லிறைஞ்சிவாய் புதைத்து மென்மெலப்

     பாங்குறுஞ் செவிகொளப் பகரு வாரரோ.

43

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, வாசனை பரிமளிக்கின்ற பூ மாலையையுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இஃது என்ன செய்கையென்று தெரியும்படி அவ்விடத்தில் தங்கிய தூதர்களைக் கேட்ட மாத்திரத்தில், அத்தூதர்கள் தாமரை மலரை நிகர்த்த அவர்களது திருவடிகளிற் பணிந்து வாய்பொத்தி அழகு பொருந்திய காதுகளிற் கொள்ளும்படி பையப்பையச் சொல்லுவார்கள்.