இரண்டாம் பாகம்
குதிரிப் படலம்
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
3665.
கொற்றவெண் கவிகை நீழ
லுலகெலாங் குளிரச் செய்து
வெற்றிகொண் டிசுலா மோங்க
விறனபி யிருக்கு நாளிற்
பற்றலர் தேயந் தோறும் பற்பல்கா
லிருந்து சாவு
மொற்றரி லொருவர் தோன்றிச்
சிலமொழி யுரைப்ப தானார்.
1
(இ-ள்) வலிமை பொருந்திய
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வெற்றியைக் கொண்ட வெள்ளிய
சந்திரவட்டக் குடையினது நிழலினால் இவ்வுலக முழுவதையுங் குளிரப் பண்ணித் தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கமானது வளரும்படி விஜயத்தைப் பெற்று உறைகின்ற காலத்தில், சத்துராதிகளான
காபிர்களது நகரங்க ளெல்லாவற்றிலுந் தங்கிப் பற்பல தடவை அச்சத்துராதிகளது யோசனைகளைக் கேட்டுத்
தெரிகின்ற தூதர்களில் ஒரு தூதர் வந்து சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினார்.
3666.
மதீனமா நகரிற் றென்கீழ்த்
திசையினில் வளமை யோங்கக்
குதிவரால் வனச வாவி சூழ்தரு
குதிரி யென்னும்
பதிபனீ சுலைமுக் கூட்டத் தாரினிற்
பல்லர் கூண்டு
விதிமுறை மறையின் மாற்றம்
பொய்யென வெறுத்து மன்னோ.
2
(இ-ள்) இந்தத் திரு
மதீனமாநகரத்தின் தென் கீழ்த்திசையில் செல்வமானது பெருகும் வண்ணம் வரால்மீன்கள் குதிக்கின்ற
தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த குதிரியென்று சொல்லு மூரிலுள்ள பனீசுலைமுக் கூட்டத்தார்களில்
அனேகர் ஒன்று சேர்ந்து உண்மையினது ஒழுங்கைக் கொண்ட நமது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது
வசனங்களை அசத்தியமென்று நிந்தித்து.
3667.
நன்னயக் கலிமா வென்னு நாமநா
நாட்டு மாக்கள்
சொன்னெறி வழுவ தாக்கித்
தூடணித் திகல தாக
மன்னநும் பெயருங் கூறும்
வாய்மையு மதித்தி டாமற்
பன்னருங் குறும்பு மேற்கொண்
டிருந்தனர் பரிவற் றென்றார்.
3
|