பக்கம் எண் :

சீறாப்புராணம்

1376


இரண்டாம் பாகம்
 

நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது இரு கண்களும் மகிழ்ச்சியடையும்படி வைத்தார்கள்.

 

3756. முன்னர்வைத்த பாத்திரத்தி னிருந்தமோ

          தகத்தைநறை முளரிக் கையாற்

     பன்னருந்துண் டப்படுத்தி நெய்தோய்த்துப்

          பதின்மர்தமைப் பண்பு கூர

     வின்னமுது செய்கவென முகம்மதுநந்

          நபியிசைப்ப வினிதி னோக்கி

     யன்னவர்கள் கையார வாயார

          வயிறார வருத்தி னாரால்.

8

     (இ-ள்) அவ்வாறு தங்கள் சந்நிதானத்தில் கொண்டு வந்து வைத்த பாத்திரத்திலிருந்த வுறட்டியை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களது வாசனை தங்கிய தாமரை மலரை நிகர்த்த கைகளினாற்  சொல்லுதற்கரிய துண்டங்களாகச் செய்து அதை நெய்யில் நனைத்துப் பண்பான ததிகரிக்கும் வண்ணம் இனிய உணவாக பத்துப் பேரை அருந்துங்களென்று கட்டளையிட, அப்பத்துப் பேர்களும் இனிமையோடும் அதைப் பார்த்துக் கைநிறையவும், வாய் நிறையவும், வயிறு நிறையவும் முண்டார்கள்.

 

3757. பதின்மரெடுத் தருந்தியும்பாத் திரத்தளவு

          குறைந்திலபின் பஃது மாந்த

     ரிதமுறவந் திருந்தருந்து மெனவுரைப்பச்

          சொற்படியே யினிது மாந்தப்

     புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தனவிப்

          படியுணவிற் பொருவி லாத

     மதிவலரெண் பதுபெயருக் களித்தனர்விண்

          ணினும்புகலு முகம்ம தன்றே.

9

      (இ-ள்) வானலோகத்திலுந் துதிக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அப் பத்துப்பேர்கள் அவ்வாறெடுத்துண்டும் அவ்வுறட்டித் துண்டுகள் அப்பாத்திரத்தி னளவைவிட்டுங் குறைந்திலன. அதன் பின்னர்ப் பத்துப் பேர்கள் மகிழ்ச்சியுறும்படி வந்து இருந்து உண்ணுங்க ளென்று கட்டளை செய்ய, அக்கட்டளையின் வண்ணமே அந்தப் பத்துப்பேர்கள் இனிமையோடு முண்ண, அத்துண்டுகள் ஆச்சரியத்தோடும் மேலும் மேலும் அதிகரித்தன.  இந்தப் பிரகாரம் ஆகாரத்தில் ஒப்பில்லாத அறிவினால் வல்லவர்களான எண்பது அசுஹாபிமார்களுக்குக் கொடுத்தார்கள்.