இரண்டாம் பாகம்
3999.
கையுங் குன்றெனுந் தோளும்வல் லுரத்தொடுங் கழுத்து
மெய்யுந் தாளும்பொன் னெற்றியுந் துண்டமும் வெரினுஞ்
செய்ய நோக்கமு மீதெனத் தெரிந்தில திரண்ட
குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்தவெங் கொடுமை.
240
(இ-ள்) கூட்டமாகிய
வஞ்சகத்தைத் தரித்தவர்களான அந்தக் காபிர்கள் தங்கள் யுத்தாயுதங்களை அவ்வாறு விட்ட வெவ்விய
கொடுமையினால் கரங்களும் மலைகளென்று சொல்லும் புயங்களும் வலிமை தங்கிய மார்புடன் கழுத்தும்
சரீரமும் பாதங்களும் பொன்னை நிகர்த்த நெற்றியும் முகமும் முதுகும் அழகிய கண்களும் இஃதென்று
விளங்கிலன.
4000.
மெல்ல நின்றுநின் றசைந்தசைந் துணர்வுமே லாட
வில்ல லாவையும் கபீபையு முளத்தினி லிருத்திக்
கல்லு நன்மொழி வாக்கினி லடிக்கடி கலிமாச்
சொல்லி வீழ்ந்தனர் போயின ருறைந்தனர் சுவனம்.
241
(இ-ள்) அவ்வாறு
விளங்காமலாக, அந்த ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்கள் அந்த யுத்தக்களத்தில் பைய நின்று நின்று
அசைந்தசைந்து அறிவானது அதிகரிக்கும் வண்ணம் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவையும், ஹபீபென்னுங்
காரணப் பெயரை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களையும் மனதின்கண் இருக்கச் செய்து படிக்கின்ற நன்மை பொருந்திய வசனமாகிய
ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை அடிக்கடி வாக்கினாற் கூறிப்
பூமியில் விழுந்து ஷகீதாகிச் சொர்க்கலோகத்தின்கண் போய்த் தங்கினார்கள்.
4001.
இன்ன வாறுதீ னவர்சில ரார்ப்பொடு மிகலிச்
சின்ன பின்னம்பட் டுயிர்விடுத் தணியுடல் சிதையப்
பொன்னின் மாநகர் புக்கினர் புக்கியுங் காபிர்
பின்ன ரும்படை யொடுங்கவ ணெறிந்தனர் பிறங்க.
242
(இ-ள்) இத்தன்மை
யாக இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடையவர்க ளானசில அசுஹாபிமார்கள் பெரிய முழக்கத்தோடும்
போராடித் தங்களது அழகிய சரீரமானது கண்டதுண்டப்பட்டுப் பிராணனை விட்டுச் சிதையும்படி ஷகீதாகிப்
பெருமை பொருந்திய சொர்க்கலோகத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள். அவ்விதஞ் சேர்ந்தும்
அந்தக்காபிர்கள் பிற்பாடும் பிரகாசிக்கும் வண்ணம் ஆயுதங்களுடன் கவண் கற்களையும் வீசினார்கள்.
|