பக்கம் எண் :

சீறாப்புராணம்

1453


இரண்டாம் பாகம்
 

4002. விசைகொண் டீண்டிய கவண்கல்வெம் போரினை விளைப்ப

     வசையி லாதடன் முகம்மது மார்பினும் வாம

     மிசையு நெற்றியி னுஞ்சென்று தாக்கின விதனாற்

     றிசையு மாசையு மிரங்கிட விருந்தனர் தியங்கி.

243

     (இ-ள்) அவ்வாறு வேகத்தைப் பெற்று நெருங்கிய அந்தக் கவண் கற்களால் வெவ்விய யுத்தத்தை விளைக்க, அவைகள் குற்ற மில்லாது வலிமையையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது நெஞ்சிலும் அழகானது பொருந்திய நெற்றியிலும் போய்த் தாக்கின. இதனால் அவர்கள் எண்டிசைகளும் நான்கு திக்குகளும் இரங்கும்படி சோர்ந்து இருந்தார்கள்.

 

4003. ஈத லாதொரு கவண்கல்கீழ் வாய்ப்புறத் திலங்குஞ்

     சோதி மூரலுஞ் சிதைத்திடத் தைத்தது தொகுத்த

     பூத லத்தினி லுணர்வுடன் சாய்ந்தனர் பொருவா

     மாதி ரத்தொடு மதியொடும் பேசிய வள்ளல்.

244

     (இ-ள்) இஃதல்லாமலும் ஒரு கவண்கல் கீழ்வாய்ப் பக்கத்திற் பிரகாசிக்கின்ற ஒளிவையுடைய பல்லையுஞ் சிதைக்கும் வண்ணம் போய்த் தைத்தது. இதனால் ஒப்பற்ற மலையோடுஞ் சந்திரனோடும் பேசிய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தொகுத்த இப்பூமியின்கண் அறிவோடுஞ் சரிந்தார்கள்.

 

4004. பத்தி மீறிய தீனவர் படவுமக் கவணாற்

     றத்தி தத்தியிற் படரொளி முகம்மது தமக்குங்

     கத்த னேவலிற் றுனிவந்து கருதிய தென்றா

     லெத்த லத்தினு மியாவரே துன்பமி லாதார்.

245

     (இ-ள்) அன்றியும், நல்லொழுக்கத்தி லதிகரித்த தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்கள் அவ்வாறு ஷகீதாகவும், அந்தக் கவண்கல்லினால் பாய்கின்ற இனிமையோடும் பரவிய பிரகாசத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குங் கடவுளான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் ஏவலினால் துன்பமானது வந்து கருதியதென்றால் எவ்வுலகத்திலுந் துன்பமில்லாதவர் யாவர்? ஒருவரு மில்லர்.

 

4005. வண்டு பாண்செயுந் தொடைபுயக் ககுபெனு மன்னர்

     கண்டு வீந்தன ரோவென மனத்தினிற் கலக்கங்

     கொண்டு தூதர்மு னணுகின ரணுகலுங் குறித்து

     விண்டி லாதுற நோக்கினர் தாமரை விழியால்.

246