இரண்டாம் பாகம்
(இ-ள்) யாவற்றிற்கும்
ஆதியிலுண்டான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அவ்வாறு குதிரையின் மேலேறி வண்டுறுக்கிக் கொண்டு தங்கள் மீது வருகின்ற அந்த
உபையென்பவனை நீங்கள் எதிராக மறிக்காமல் எண்டிசைகளிலும் கீர்த்தியானதுண்டாகும் வண்ணம் விட்டு
விடுங்க ளென்று கூறினார்கள். அந்த உபையென்பவனும் வேகத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.
4012.
முன்னர் வந்தடல் வாளினி லோங்குமுன் முசுலி
மன்ன ராரிது வேலினை நபிகையின் வாங்கித்
தென்னு லாவிய பிடங்கினா னீட்டினர் திறல்சே
ரன்ன வன்களத் திடையினிற் பட்டன வன்றே.
253
(இ-ள்) அவன் அவ்வாறு
முன்னர் வந்து வலிமையைக் கொண்ட தனது வாளாயுதத்தினா லோங்கி வெட்டுவதற்கு முன்னர் நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் முஸ்லிம்களது
அரசரான ஆரிது றலியல்லாகு அன்கு அவர்களது வேலாயுதத்தைக் கையினால் வாங்கி அழகானது உலாவப் பெற்ற
அதன் பிடங்கினால் நீட்டி இடித்தார்கள். அஃது வலிமை பொருந்திய அந்த உபையென்பவனது கழுத்தின்கண்
பட்டது.
4013.
காய மின்றருங் களத்திடைப் பட்டன கண்டான்
கூயி னானினி யென்செய்கு வேனெனக் குழறிப்
பாயும் வெம்பரி புடைத்தனன் படையொடு முறிந்து
போயி னானிதோ கொன்றனன் காணெனப் புலம்பி.
254
(இ-ள்) வடுவில்லாது
அரிய கழுத்தின்கண் அவ்வாறு பட்ட அதை அவன் தெரிந்து இனி யான் என்ன செய்வேன்? செய்யுமு பாயமொன்று
மில்லையே்யென் றுளறிச் சத்தமிட்டுப் பாயா நிற்கும் வெவ்விய தனது குதிரையை அடித்துத் தனது
படையோடும் இதோ முகம்ம தென்பவன் என்னைக் கொலை செய்தா னென்று சொல்லிப் புலம்பிக் கொண்டு
முறிந்து சென்றான்.
4014.
போது கின்றவன் றனைவிளித் தடிக்கடி புலம்பி
யோது கின்றனை வெகுண்டனை பயந்தனை யுடைந்தாய்
சீத காதுன்றன் களத்திடை காயமுந் தெரிவ
தேது மில்லையென் றுணர்த்தினர் மருங்கினி லெவரும்.
255
(இ-ள்) அவ்வாறு செல்லுகின்ற
அந்த உபை யென்பவனைப் பக்கத்தில் நின்ற அனைவருங் கூப்பிட்டு நீ அடிக்கடிப் புலம்பிப்
|