பக்கம் எண் :

சீறாப்புராணம்

1458


இரண்டாம் பாகம்
 

4018. என்ன பாவமிங் கென்செய்கை யேதுவன் மாயம்

     வன்னி யொத்தெழு சினத்தினன் வீந்திடும் வகையென்

     றுன்னி யுன்னிநெஞ் சகத்தெழு மறிவையு மோட்டித்

     தன்னை யுமறந் துடைந்தனர் கடைபடு தயிரின்.

259

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு கலக்கமடைந்து இவ்விடத்தில் இஃது என்ன பாதகம்? என்ன செய்கை, என்ன வன்மையைக் கொண்ட வஞ்சனை? நெருப்பைப் போன்று எழும்பா நிற்குங் கோபத்தையுடைய இந்த உபையென்பவன் மாண்டவகை யென்று மிகவுஞ் சிந்தித்து மனதின்கண் ஓங்கா நிற்கு முணர்வையு மோடச் செய்து கடைகின்ற தயிரைப் போலத் தன்னையும் மறந்து தளர்ந்தார்கள்.

 

4019. வீடிப் போனதன் றவன்விடும் வஞ்சம்நம் விதியுங்

     கூடிக் கொண்டங்ஙன் மூட்டுத றுணிந்தது கோற

     னேடிப் பாய்புலி யடங்கிய போனபி நின்றா

     னோடிப் போவது கருமமென் றனைவரு முரைத்தார்.

260

     (இ-ள்) அவர்க ளியாவரும் அவ்வாறு தளர்ந்து உபையென்பவன் உண்மையாக இறந்து போனவனல்லன், அந்த முகம்மதென்பவன் விட்ட மாயமும் நமது ஊழும் ஒன்று சேர்ந்து கொண்டு அவ்விதம் மூட்டத் துணிந்தது. கொலைத் தொழிலை விரும்பிப் பாயா நிற்கும் புலி அடங்கியதைப் போலும் நபியாகிய அவன் நிற்கின்றான். ஆதலால் நாம் இனி இவ்விடத்தை விட்டும் ஓடிப் போவதே காரியமென்று சொன்னார்கள்.

 

4026. விண்டு ளாவிய நறுங்கொடிப் படலமும் விரிந்த

     கொண்டல் கீழ்தரக் குலவிய குடைகளுங் கொதித்து

     மண்டு போர்செயும் படைக்கலன் களுமண்ணில் வழங்கி

     யொன்றி யாய்ச்சென்று போயின ரரசர்தம் மூரின்.

261

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அரசர்களான காபிர்கள் ஆகாயத்திற் பரவிய நறிய கொடிகளினது படலத்தையும், படர்ந்த மேகங்களுங் கீழாகும் வண்ணம் உலாவிய குடைகளையும், கோபித்து நெருங்கிய யுத்தத்தைப் புரியா நிற்கும் யுத்தாயுதங்களையும் பூமியின்கண் போட்டுவிட்டு ஏகமாய்ச் சென்று தங்கள் தேயங்களிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4021. தூசு விட்டெறிந் தோடினர் சிலர்வழி தூண்டா

     வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர்மன மேங்கி

     யாசை தோறினு மோடினர் சிலரகன் முதுகு

     கூசிக் கூசிநின் றோடினர் சிலர்பெருங் குபிரர்.

262