இரண்டாம் பாகம்
அமுறாப் படலம்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
4028.
செங்கோ லென்னுங் கொழுங்கொம்பிற்
செழுந்தீ னென்னும் பயிரேற்றி
யெங்கோன் முகம்ம தெனுநயினா
ரெழில்சேர் மதீனத் தினிதிருப்பச்
சங்கா மையின்மேற் றவழ்கின்ற
தடஞ்சூழ் மக்க மாநகரில்
வெங்கோற் றிருத்து மபாசுபியான்
செய்கை யனைத்தும் விளம்புவமால்.
1
(இ-ள்) எங்க ளிராஜரான
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா அஹ்மது
முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்று சொல்லும் ஆண்டவரவர்கள் செங்கோ
லென்று கூறுஞ் செழிய கொம்பில் வளமையைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் பயிரையேற்றி இனிமையோடும்
அழகைப் பொருந்திய திருமதீனமா நகரத்தின்கண் ணிருக்க, சங்கங்கள் ஆமையின் மீது தவழுகின்ற
வாவிகள் வளைந்த திருமக்கமா நகரத்தி னிடத்துக் கொடுங்கோலை மிகுவித்த அபாசுபியா னென்பவனது
செய்கைக ளெல்லாவற்றையும் யாங் கூறுவாம்.
4029.
ஓயாக் காற்றின் சருகென்ன
வொதுங்கி மெலிந்து புறங்காட்டிச்
சாயா நின்ற தானையொடுந்
தன்னூர் புக்கித் துயரென்னு
மாயாக் கடலில் வீழ்ந்துமதி
மயங்கி யேது மறந்தென்றும்
வீயாச் சமயங் குலத்தோடு
மவிந்த தென்ன வெம்பினனால்.
2
(இ-ள்) அந்த அபாசுபியா
னென்பவன் மாறாத காற்றி லகப்பட்ட சருகைப் போலும் ஒதுங்கித் தளர்ந்து பின்காட்டிச்
சாய்கின்ற தனது சைனியங்க ளோடுந் தனது பதியாகிய திருமக்கமா நகரத்தின்கண் போய்ச் சேர்ந்து
கிலேசமென்று சொல்லும் மாயாத சமுத்திரத்தினிடத்து விழுந்து அறிவழிந்து யாவையும் மறந்து எக்காலமுங்கெடாத
நமது மார்க்கமும் நங்குலத்தோடுங் கெட்டுப் போயிற்றென்ற வாடினான்.
|