பக்கம் எண் :

சீறாப்புராணம்

1465


இரண்டாம் பாகம்
 

வாச்சியங்கள் ஒலிக்கவும், பாலை நிலங்களையுங் காட்டினது தானங்களையுந் தாண்டி இருமருங்கும் விருக்கங்களைப் பெற்ற பாதைகளினது சோலைகள் சூழ்ந்த இறவுஹாவென்று சொல்லும் இடத்தில் வந்து சேர்ந்தான்.

 

4035. கறுபு தருசேய் மெலிந்துபுறங்

         காட்டு மறபித் தளத்தோடு

     மிறவு காவின் வந்திறங்கி

         யிருந்தா னிருந்தா னெனச்சொன்னார்

     பொறுமைப் பயிர்மேன் மேல்வளர்த்துப்

         புகழா மென்னு மலர்காட்டி

     மறுமைப் பதவிக் கனியுதவும்

         வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார்.

8

     (இ-ள்) அவன் அவ்வாறு வந்து சேர, தூதர்கள் ஹறுபென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த புதல்வனான அந்த அபாசுபியா னென்பவன் வாடிப் பின்காட்டி யோடுகின்ற அறபிக்காபிர்களது சைனியத்தோடும் இறவுஹாவென்னுந் தானத்தில் வந்து இறங்கியிருந்தான், இருந்தானென்று கூறினார்கள். அஃதைப் பொறுமை யாகிய பயிரை மேலாக வளரச் செய்து கீர்த்தியா மென்று சொல்லும் புஷ்பத்தைக் காட்டி மறுமைப் பேறாகிய பழத்தைக் கொடுக்கின்ற வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்றுச் சந்தோஷ மடைந்தார்கள்.

 

4036. வீரம் போட்டுப் படைக்கலனும்

         போட்டு மிகுந்த பெருஞ்சமய

     வாரம் போட்டுப் புறங்காட்டு

         மன்னன் மீண்டும் வந்தனனென்

     றீரம் பூண்ட மனத்தவரோ

         டியம்பி யுகுதி னெழுந்ததிறல்

     வீர ரெவரு மெழுகவென்றார்

         வென்றி சிரசின் மேற்கொண்டார்.

9

      (இ-ள்) அவ்வாறு சந்தோஷ மடைந்த, தலையின் மீது வெற்றியைக் கொண்டவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தனது வல்லமையை வீசி யுத்தாயுதங்களையு மெறிந்து அதிகரித்த பெரிய மார்க்கத்தினது உரிமைகளையும் வழுவ விட்டுப் பின்காட்டி ஓடிய அரசனாகிய அபாசுபியானென்பவன் மறுத்தும் போர் செய்யக் கருதி வந்திருக்கின்றா னென்று காருண்ணியத்தைத் தரித்த இதயத்தை