பக்கம் எண் :

சீறாப்புராணம்

1466


இரண்டாம் பாகம்
 

யுடைய அசுஹாபிமார்களோடுங் கூறி உகுதென்னுந் தானத்திற்கு முன்னரெழுந்துவந்த வெற்றியைக் கொண்ட வீரர்களனைவரும் எழும்பி வாருங்களென்று கட்டளை யிட்டார்கள்.

 

4037. சொன்ன மொழிகேட் டெழுபதடல்

         வேந்தர் தொகையில் சேனையொடுந்

     துன்னும் பலவாச் சியமுழங்க

         வெழுந்தா ரினிய தோழரொடு

     மன்னர் முகம்ம தெனுநபியும்

         வாசி யதனின் மேலேறி

     மின்னுங் கவிகை நிழல்கவிப்ப

         வெழுந்தார் விரிசா மரையோங்க.

10

     (இ-ள்) அவ்விதங் கட்டளையிட்ட வார்த்தையைக் கேள்வி யுற்று வலிமையை யுடைய எழுபது அரசர்கள் கணக்கற்ற சைனியத்தோடும் நெருங்கிய பலவாச்சியங்க ளொலிக்கும் வண்ண மெழும்பினார்கள். அரசராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுல் முறுசலீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்று சொல்லும் நபியவர்களும் இனிமையை யுடைய தங்கள் தோழர்களோடுங் குதிரையின் மீதேறிப் பிரகாசியா நிற்குங் குடைகள் நிழலைக் கவிக்கவும், விரிந்த சாமரங்க ளோங்கவு மெழுந்தார்கள்.

 

4038. வெற்றிக் கொடிமுன் செலச்சேனை

        வேலை நடப்ப வண்டினங்கள்

     சுற்று மிரங்கத் தீயென்னத்

        தோன்று மரைவா விகள்கடந்து

     தெற்றும் வளமை தருமதீனாத்

        தென்பா லிருகா தரையாறு

     முற்று மேவி யமுறாவி

         னிருந்தார் முகம்ம தெனுநபியே.

11 

     (இ-ள்) அவ்வா றெழுந்து நமது நாயகம் நபிகட் பெருமானார் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்று சொல்லும் நபியவர்கள் வெற்றிக் கொடியானது முன்னாற் போகவும், சேனாசமுத்திரமானது நடக்கவும், வண்டுக் கூட்டங்கள் சுற்றிலு மொலிக்கவும், நெருப்பைப் போலும் விளங்கா நிற்குந் தாமரைப் புஷ்பங்களையுடைய தடாகங்களைத் தாண்டிப் பின்னிய செல்வப் பொலிவைக் கொடுக்கின்ற திருமதீனமா நகரத்திற்குத் தென் பக்கத்தில் இரண்டரைக் காதவழி முழுவதும் போய்ச் சேர்ந்து அமுறாவென்னுந் தானத்தி லிருந்தார்கள்.