இரண்டாம் பாகம்
4039.
ஆண்டு சிறந்த சிற்றூருக்
கதிபன் குசாயிக் கூட்டத்துளன்
வேண்டுந் தீனோர் தமக்குநன்மை
வேண்டாக் காபிர் தமக்குமிகப்
பூண்ட நண்ப னியாவருக்கும்
பொதுவாய் நின்றோன் மகுபதெனத்
தூண்டும் பெயரோ னிவன்றிருமெய்த்
தூதர் திருமுன் வந்தனனால்.
12
(இ-ள்) அவ்வா
றிருக்க, அங்கு மேன்மைப்பட்ட சிறிய நகரத்திற்கு அரசனும், குசாயிக் கென்னுங் கூட்டத்தி லுள்ளவனும்,
விரும்பா நிற்குந் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்களுக்கும் நன்மையை
விரும்பாத காபிர்களுக்கும் மிகவும் பூண்ட நேசத்தை யுடையவனும், அனைவருக்கும் பொதுவாக நின்றவனும்,
மகுபதென்று தூண்டிச் சொல்லுகின்ற நாமத்தை யுடையவனு மான இவன் தெய்வீகந் தங்கிய சத்தியத்
தூதரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களது அழகிய சந்நிதானத்தில் வந்தான்.
4040.
வந்தா னடியிற் கைகுவித்து
வணங்கி யாண்டோர் பாலிருந்து
பிந்தா தனேக மொழிவினவிப்
பேசி மகிழ்ந்து பலவாழ்த்திக்
கொந்தா ரரசே யெனப்போற்றி
யெழுந்து கோர மேற்கொண்டு
கந்தா டசல மெனக்களித்துச்
சென்றான் கருணைக் கடலானே.
13
(இ-ள்) கிருபைச் சமுத்திரனான
அவன் அவ்வாறு வந்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களது சரணங்களில் தனது கரங்களைக் குவியச் செய்து பணிந்து அங்கு ஓர் பக்கத்தி
லுட்கார்ந்து தாமதியாமற் பல சமாச்சாரங்களை வினாவி யுரைத்துச் சந்தோஷமடைந்து அனேக விதமாய்த்
துதித்துப் பூங்கொத்துகளினாற் செய்யப்பட்ட மாலைகளைத் தரித்த அதிபதியாகிய நபிகட்
பெருமானே! என்று சொல்லிப் புகழ்ந்து எழும்பிக் குதிரையின் மீதேறிக் கட்டுத் தறியைப்
பொருதுகின்ற மலையை நிகர்த்த உடலையுடைய யானையைப் போலு மதமுற்றுப் போயினான்.
|