இரண்டாம் பாகம்
குதித்து நடக்கவும், கணக்கற்ற
தைரியத்தைப் பெற்ற வீரர்கள் ஒன்று கூடி நெருங்கவும் வருகின்ற சமயத்தில், வெவ்விய குரூரனான
அபா அசாவென்னும் பெயரை யுடையவன் அவனது ஊழானது அவனைப் பிடித்து முன்னே தள்ள வலிதில் அங்கு வந்தான்.
4048.
கண்டா ரயிர்த்தார் கொடியனெனக்
கனன்றார் பிடித்தார் மனத்திரக்கம்
விண்டார் கயிற்றா லிருகரமும்
விசித்தார் விசித்துச் செழுங்கரத்திற்
கொண்டார் நயினார் முன்விடுத்தார்
நோக்கி யிவன்போற் கொடியவனெங்
குண்டா வென்னச் சிரமசைத்தார்
சினந்தா ருளத்தி னகைத்தனரால்.
21
(இ-ள்) அவன் அவ்வாறு
வர, அவனை அசுஹாபிமார்கள் பார்த்துச் சந்தேகப்பட்டு இவன் துஷ்டனென்று கோபித்து அவனைப் பிடித்து
இதயத்தின் கண்ணுள்ள காருண்ணியத்தை விட்டுக் கயிற்றினால் அவனது இரு கைகளையுங் கட்டினார்கள்.
அவ்விதங் கட்டிச் செழிய கைகளிற் பிடித்துக் கொண்டு நயினாரான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது முன்னர் கொண்டு வந்து
விட்ட, அவர்கள் அவனைப் பார்த்து இவனைப் போலுந் துஷ்டன் எங்கேனு முள்ளனா? இல்லனென்று
சொல்லித் தங்களது தலையை யாட்டி மனதின்கண் கோபித்து நகைத்தார்கள்.
4049.
பொல்லா மனத்தன் வாய்மையில்லாப்
புலைய னெவர்க்கு மிகப்பொய்யன்
கல்லாக் கசடன் முன்பதுறு
களத்திற் பிடிபட் டிரக்கமுறக்
கொல்லா தரிய தலைவிலையும்
வாங்கா விட்டோங் குறிக்கொள்ளா
தெல்லா மறந்து காபிருட
னிகழ்ந்தான் வசையு மியம்பினனால்.
22
(இ-ள்) அவ்வாறு
நகைத்து இவன் பொல்லாத இதயத்தை யுடையவன். சத்திய மில்லாத சண்டாளன். யாவரிடத்தும்
மிகவும் பொய் பேசுவோன். படியாத கீழ்மகன். முன்னர் பதுறென்னுந் தானத்தில் நடந்த யுத்தக்களத்தில்
பிடிபட்டுக் காருண்ணியம் பொருந்தக் கொலை செய்யாமல் அருமையான முதல் விலையும் வாங்காமல் விட்டோம்.
அவைகள் யாவற்றையுங் கருதாது மறந்து விட்டுக் காபிர்களோடும் நம்மை நிந்தித்தான். இகழ்ச்சியான
வார்த்தைகளையும் பேசினான்.
|