இரண்டாம் பாகம்
4050.
மின்னார் வேலீ ரிந்நாளும்
வேவு பார்க்க விங்குவந்தான்
கொன்னார் வாளா லிங்கிவனைக்
கோறல் செய்மி னெனச்சொன்னார்
பன்னா வுறவாய் கடித்துறுக்கிப்
பற்றிக் கொடுபோ யோர்மருங்கிற்
சென்னீ ரொழுக வாளெறிந்தார்
திரும்பா நரகந் தனிற்போனான்.
23
(இ-ள்) பிரகாசம் நிறைந்த
வேலாயுதத்தை யுடைய அசுஹாபிமார்களே! இப்போதும் இவன் இங்கே யுளவு பார்க்கும் வண்ணம் வந்து சேர்ந்தான்.
ஆதலால் இவனை இவ்விடத்தில் பெருமை பொருந்திய வாளாயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யுங்க
ளென்று கட்டளையிட்டார்கள். அவர்களும் நாவானது பற்களிற் பொருந்தும் வண்ணம் அதரங்களைக் கவ்வி
அதட்டி அவனைப் பிடித்துக் கொண்டு ஓர் பக்கத்திற்சென்று இரத்தமானது சிந்தும்படி வாளால் வீசிக்
கொன்றார்கள். அவனும் மீளாத நரகலோகத்தின்கண் போய்ச் சேர்ந்தான்.
4051. கொடியோ னவனை விண்ணிடத்தி
லேற்றி மனத்தின் குறைதீர்த்துத்
தடியோ டூனுண் டுடல்சிவந்த
தடவேல் வேந்தர் பலசூழப்
படியோ டெழுந்த மலையோடும்
பகர்ந்த திருநந் நபியிறசூல்
வடிவார் சோலை சூழ்ந்திருந்த
மதீனா நகரில் வந்தனரால்.
24
(இ-ள்) பூமியின் கண்ணோங்கிய
மலையோடும் பேசிய தெய்வீகந்தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹாமிது அஹ்மது முஹம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் துஷ்டனாகிய அந்த அபா அசாவென்பவனை அவ்வாறு கொலை செய்து ஆகாயத்தில்
ஏற்றுவித்து மனதின்கண்ணுள்ள குறையை யொழித்துச் சத்துராதிகளது தடியுடன் ஊனை யருத்தித் தனது தேகமானது
சிவக்கப் பெற்ற பெரிய வேலாயுதத்தை யுடைய அரசர்களான அசுஹாபிமார்கள் பலருஞ் சூழும் வண்ணம்
அழகைப் பொருந்திய சோலைகள் வளைந் துறைந்த திருமதீனமா நகரத்தின்கண் வந்து சேர்ந்தார்கள்.
|