இரண்டாம் பாகம்
ககுபுவதைப் படலம்
கலிவிருத்தம்
4052.
துய்யநந் நபியிற சூல்வன் மாநகர்
வையகம் புகழ்தர விருப்ப வந்தொரு
செய்யநற் றூதரிற் றிறமை பூண்டவர்
பொய்யில ரோர்மொழி புகலு வாரரோ.
1
(இ-ள்) பரிசுத்தத்தை
யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்தி முல் அன்பியா
முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இவ்வுலகமானது துதிக்கும்
வண்ணம் வலிமை பொருந்திய திருமதீனமா நகரத்தின்கண் ணிருக்க, அழகிய நன்மையைக் கொண்ட தூதர்களில்
அசத்திய மற்றவரான வலிமையைத் தரித்த ஒரு தூதுவர் வந்து ஓர் சமாச்சாரத்தைக் கூறுவார்.
4053.
வண்டரி சுண்டிசை முரல மாமயி
லுண்டிரு செவியினா லுறங்கு மாடமுட்
கொண்டிலங் கியசுகு றாவென் றோதிய
விண்டுறு பலவளம் விளங்கு மூரினில்.
2
(இ-ள்) வண்டுகள் மதுவையுண்டு
கீதங்களைப்பாட, அதைப் பெருமை பொருந்திய மயில்கள் இரண்டு காதுகளினாலு முட்கொண்டு நித்திரை
செய்யா நிற்கு முப்பரிகைகளைத் தன்னகத்திற் கொண்டு பிரகாசிக்கின்ற சுகுறாவென்று சொல்லும்
மேகமானது பொருந்திய பல செல்வப் பொலிவானது விளங்குகின்ற நகரத்தில்.
4054.
இருந்தனன் தீனருக் கிடுக்கண் செய்நிலை
பொருந்தினன் கொலையொடு பழியும் பூண்டனன்
றிருந்திலா வழியினிற் சேறன் மேயின
னருந்தவ மியாவையு மழித்த தீமையன்.
3
(இ-ள்) இருக்கின்றவனும்,
தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்களுக்குத் துன்பத்தைச் செய்கின்ற
நிலைமையைப் பொருந்தினவனும், கொலைத் தொழிலுடன் பழியையுந் தரித்தவனும், செவ்வையற்ற
மார்க்கத்தில் செல்லுதலை மேவினவனும், அருமையான தவங்க ளெல்லாவற்றையும் இல்லாமற் செய்த பாதகனும்.
|