பக்கம் எண் :

சீறாப்புராணம்

1477


இரண்டாம் பாகம்
 

ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்கள் தெரிந்து விரைவிற் சென்று ஒழுங்கோடுங் கூறினார்கள். அஃதை முடிவற்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது அதிபரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்க ளுணர்ந்து அப்புறத்தில் போய் நின்றார்கள்.

 

4066.  இதமுற நின்றனன் கோற லெய்துமுன்

     கதமொடு மேகின னென்கொல் காணென

     வதிசய மெய்தின னாதி முன்செயும்

     விதியினை மதியினால் விலக்க லாகுமோ.

15

     (இ-ள்) அவ்வாறு நிற்க, அந்தக் ககு பென்பவன் சந்தோஷமானது பொருந்தும் வண்ணம் இங்கு நின்றவனான இந்த முகம்ம தென்பவன் நாம் கல்லைத் தள்ளி அதனால் அவனைக் கொல்லுவதற்கு முன்னர் வலிமையோடும் அவ்விடத்தை விட்டும் போயினான். இஃது என்ன மாயமென்று ஆச்சரிய மடைந்தான். யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஆதியில் கற்பித்த நியமிப்பைப் புத்தியினால் விலக்க முடியுமா? ஒருவராலும் முடியாது.

 

4067.  இங்கிருந் தினிப்பகை விளைத்தி டாமுன

     மங்குசென் றகுமதி னடியிற் சேர்குதற்

     றங்கிய வறிவெனத் தானை சூழ்தர

     வெங்கடு மனத்தினன் விரைவி னெய்தினான்.

16

     (இ-ள்) கொடிய கடுமையான இதயத்தை யுடைய அந்தக் ககுபென்று சொல்லும் அரசனானவன் நாம் இனி இவ்விடத்திலுறைந்து அவர்கள் பகையை விளைப்பதற்கு முன்னர் அங்குப் போய் அஹ்மதென்னும் அபிதானத்தை யுடைய அந்த முகம்மதென்பவனது பாதங்களிற் சேர்வது நிலைபெற்ற புத்தியென்று தனது சைனியங்கள் சூழும் வண்ணம் வேகத்தில் அங்குப் போய்ச் சேர்ந்தான்.

 

4068. ஆரண விளக்கினை யறிவின கொண்டலைப்

     பாரினைத் தாங்கிய பருப்ப தத்தினைக்

     காரணக் கடவுளைக் கரையி லாவருள்

     வாரியைத் தொழுதடி வணங்கி னானரோ.

17

     (இ-ள்) அவ்வாறு சேர்ந்து வேதவிளக்கும், அறிவைச் சொரியும் மேகமும், இப்பூபாரத்தைச் சுமந்த மலையும், காரணத்தை யுடைய கடவுளும், கரையில்லாத காருண்ணியத்தைக் கொண்ட சமுத்திரமுமான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பணிந்து அவர்களது பாதங்களி லிறைஞ்சினான்.