பக்கம் எண் :

சீறாப்புராணம்

1478


இரண்டாம் பாகம்
 

4069.  செறுத்தன னினைத்தவெந் தீமை யாவையும்

     பொறுத்தன ரிருத்தினர் புளக மெய்தினர்

     குறித்திடாக் கீழ்மையர் செய்யுங் குற்றமே

     வெறுப்பது பெரியர்தம் மேன்மை யாமெனா.

18

     (இ-ள்) அவ்வாறு இறைஞ்ச, குறிக்காத தாழ்மையையுடையவர்க ளியற்றிய குற்றங்களை வெறுத்து விடுவது பெரியோர்களது மேலான தன்மை யாகுமென்று கொலைத் தொழிலிற்காக அந்தக் ககுபென்பவன் கருதிய தீங்குக ளெல்லாவற்றையும் அந்நாயக மவர்கள் மன்னித்து அவனை அங்கு இருக்கும்படி செய்து மகிழ்ச்சி யடைந்தார்கள்.

 

4070.  ஓரிடத் திருந்தன னொக்க லோரெனும்

     வேரினைக் கல்லும்வே லென்ன வந்தனன்

     பாரிடத் துறும்பழி செய்யும் பாதக

     நீரினன் சிறிதுரை நீட்டு வானரோ.

19

     (இ-ள்) அவ்வாறு மகிழ்ச்சி யடைய, உறவின ரென்று சொல்லும் வேரைக் கல்லும் வேலாயுதத்தைப் போன்றிவ்வுலகத்தில் தோன்றினவனும், இப்பூமியின்கண் மிகுத்த பழிகளைச் செய்கின்ற அதிகபாவத்தைக் கொண்ட குணத்தையுடையவனும், அங்கு ஓர் தானத்தில் தங்கி யிருந்தவனுமான அந்தக் ககுபென்பவன் சிறிது வார்த்தைகளை நீட்டிச் சொல்லுவான்.

 

4071.  அருந்தவ மழித்தெழு மடைய லாரொடுந்

     திருந்திய நெறிச்செலுந் தீனர் தம்மொடும்

    பொருந்துத லில்லையா மரிய பூதல

     வருந்தலை நீக்கிய புகழின் மாட்சியீர்.

20

      (இ-ள்) அருமையான இந்தப் பூலோகத்தின்கண் ணுள்ள சகலஜீவராசிகளதுந் துன்பத்தை யகற்றிய கீர்த்தியினது மாட்சிமையை யுடைய நபிகட் பெருமானே! நாங்கள் அரிய தவத்தை இல்லாமற் செய்து ஓங்கா நிற்கும் உங்களது சத்துராதிகளான காபிர்களோடுஞ் செவ்வை யாகிய பாதையின்கண் நடக்குந் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்க ளோடுஞ் சேருவ தில்லை.

 

4072.  இதமுற விருவகைப் பெயர்கட் கென்றுமே

    பொதுமன மியைந்தனம் பொய்யி தன்றொரு

     விதிதவ றிலமென மெய்மை பேசிலாச்

     சிதைவுறு மனத்தினன் றெரியக் கூறினான்.

21

     (இ-ள்) அன்றியும், சத்தியத்தைப் பேசாத கேட்டைப் பொருந்திய இதயத்தை யுடையவனான அந்தக் ககுபென்பவன்