பக்கம் எண் :

சீறாப்புராணம்

1479


இரண்டாம் பாகம்
 

மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் அந்த இரு பகுப்பான வர்களுக்கும் எக்காலமும் பொதுத் தன்மையான மனத்தைப் பொருந்தினோம். இஃது அசத்தியமல்ல, ஒப்பற்ற உண்மையை விட்டுந் தவறோ மென்று விளங்கும்படி சொன்னான்.

 

4073.  சொல்லிய வாசக மியைந்து தோமறச்

     செல்லுநின் பதியென வணங்கிச் சென்றனன்

     வில்லுமிழ்ந் திருட்டினை வெருட்டு மெய்நபி

     யெல்லையில் படையொடு மதீன மெய்தினார்.

22

     (இ-ள்) அவன் அவ்வாறு கூறிய வார்த்தைகளுக்கு அந்நாயக மவர்களு முடன்பட்டு நீ உனது நகரத்திற்குக் குற்றமறச் செல்லுவாயாக வென்று கட்டளையிட, அவனும் அவர்களைப் பணிந்து போயினான். பிரகாசத்தைக் கக்கி அந்தகாரத்தை வெருட்டா நிற்குந் திருமேனியை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களது அளவற்ற சைனியங்களோடுந் திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4074.  வானவர் பரவுந் துணையடிக் கமல

          வள்ளலாண் டிருந்தன ரிப்பா

     லீனமில் வலிக்கு மறனொடு விதிக்கு

          மிறுதிநாட் டேடிவெங் கொலையு

     மூனமும் பழியும் பாவமு நாளு

          முயிரெனத் தாங்கினன் வெய்ய

     கோனிலை புரந்தோன் ககுபெனு நாமக்

          கொடுமையன் குறித்தவை யுரைப்பாம்.

23

     (இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து மார்கள் வணங்கா நிற்கும் இருபாதங்களாகிய தாமரை மலர்களையுடைய வள்ளலான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அந்தத் திருமதீனமா நகரத்தில் அவ்வாறு போய்ச் சேர்ந்து இருந்தார்கள். பின்னர் குற்றமற்ற தனது வலிமைக்கும் வீரத்தோடு விதிக்கும் முடிவு நாளைத் தேடிக் கொடிய கொலையையுங் குற்றத்தையும் பழியையும் பாவத்தையும் பிரதி தினமும் பிராணனைப் போலும் பூண்டவனுங் கொடுங் கோலினது முறைமையில் தனது தேயத்தை ஆள்கின்றவனுமான ககுபென்று சொல்லும் அபிதானத்தை யுடைய குரூரன் கருதியவைகளை யாம் சொல்லுவாம்.