இரண்டாம் பாகம்
4075.
வாய்மையு மறந்தா னன்றியு நீத்தான்
வரன்முறை வழியென்ப தெறிந்தான்
றீமையே நினைந்தான் செய்வது துணிந்தான்
தீனரைக் கோறன்மேற் கொண்டா
னாய்மதிப் பெரியோர் நன்றியா யிரந்தா
னருளினுங் கீழ்மறந் தவர்க்குங்
காய்மனத் துடனும் புன்மையே செய்யக்
கருதுமென் பவைவிளக் கினனால்.
24
(இ-ள்) அந்தக் ககுபென்பவன்
தான் ஆதியிற் சொல்லிய சத்திய வசனத்தையும் மறந்தான். நன்றியையுந் துறந்தான். வரன்முறை
வழியென்பதையும் வீசினான். பொல்லாங்குகளையே சிந்தித்தான். அவைகளை இயற்றுவதில் முயன்றான்.
தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்களைக் கொல்லுவதை மேலாகக் கொண்டான்.
ஆராய்ந்து தேர்ந்த அறிவையுடைய பெரியோர்கள் ஆயிரம் நன்றிகள் செய்தாலும் அவைகளைக் கீழோர்
மறந்து அந்நன்றிகளைச் செய்த பெரியோருக்குங் கோபத்தைக் கொண்ட இதயத்தோடுந் துன்பத்தையே
செய்ய நினைப்பார்க ளென்பவற்றை விளக்கிக் காட்டினான்.
4076.
நெய்யொடு தசையி னூனொடு பழகு
நெடியவே லேந்திய காபிர்
வையக மேவி யெவரையுங் கூவி
வகைவகை மந்திரம் பேசி
வெய்யபோர் விளைத்துக் களந்தனி லலகை
விருந்துண்டு விருப்புற வளித்துச்
செய்யதீ னவர்த மதத்தொடு வலியுந்
தேய்த்தெறி குவனென வெழுந்தான்.
25
(இ-ள்) அன்றியும்,
அவன் இரத்தத்தோடும் மாமிசத்தின் நிணத்தோடும் பழகிய நீண்ட வேலாயுதத்தைத் தாங்கிய
காபிர்களது தேயங்களிற் சென்று அந்தக் காபிர்க ளனைவரையுங் கூப்பிட்டுத் தரந்தரமாக ஆலோசனைகள்
கூறிக் கொடிய யுத்தத்தை யுண்டாக்கி அந்த யுத்தக் களத்திற் பைசாசங்கள் மாமிசங்களை விருந்தாகச்
சாப்பிட்டு மகிழ்ச்சியுறும் வண்ணங் கொடுத்து அழகிய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை யுடையவர்களது
மதத்தோடும் அவர்களது வல்லமையையுங் குறைத்து வீசுவே னென்று சொல்லி யெழும்பினான்.
|