பக்கம் எண் :

சீறாப்புராணம்

1490


இரண்டாம் பாகம்
 

மறிவினையுடைய மலையானவரே! தரித்திரத்தையுடைய தமியேனாகிய எனது வார்த்தைகளைக் காதுகளாற் கேட்கவேண்டுமென்று சில வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.

 

4095.  இனத்தினிற் போய்ப்போ யுரைப்பதற் குடலங்

          கூசுதங் குரைப்பது மிழிவென்

     மனத்தினுட் டுயர நீங்குமென் றுன்னி

          வந்தன னாகையா லீண்டு

     குனித்தெழு மதியந் தவழ்தரு கூட

          கோபுர மிலங்குமிவ் வூரிற்

     றுனித்தலி லிருந்தேன் முன்னரந் நாளிற்

          றோன்றினன் முகம்மதென் றொருவன்.

44

     (இ-ள்) எனது பந்துக்களிடத்திற் சென்று சென்று சொல்லுவதற்கு எனது சரீரமானது கூசுகின்றது. அவர்களிடத்திற் சொல்லுவதுங் குறைவு, ஆதலினால் நான் எனது சிந்தையினிடத்துள்ள துன்பமானது ஒழியுமென்று நினைத்து இங்கு வந்தேன். ஆகாயத்தின் கண் வளைந்து ஓங்கா நிற்குஞ் சந்திரனானது தவழுகின்ற கூட கோபுரங்கள் பிரகாசிக்கின்ற இந்த நகரத்தில் ஆதிகாலத்தில் துன்பமின்றி யிருந்தேன். அந்தக் காலத்தில் முகம்மதென்னும் பெயரை யுடைய ஒருவன் பிறந்தான்.

 

4096.  தூதெனத் தோன்றி வந்தனன் மாயத்

          தொடர்வலைச் சுருக்கினு ளாகி

     மாதவ மிழந்தே னாலய மிழந்தேன்

          வணக்கமென் றொருமுறை யெடுத்துத்

     தீதுற நிலத்தில் விழுந்தெழுந் திருந்து

          சென்னியும் புண்ணுலை வுற்ற

     வேதனை யானேன் கேளிரு மிழந்தேன்

          விதியினை விலக்குவ தெவனோ.

45

      (இ-ள்) கடவுளினது தூதுவனென்று அவ்வாறு பிறந்து வந்த அந்த முகம்ம தென்பவனது வஞ்சகத்தைக் கொண்ட தொடர்பாகிய வலையினது சுருக்குட் சிக்கி நான் எனது மகாதவத்தையு மிழக்கப் பெற்றேன். நமது கோவில்களையு மிழக்கப் பெற்றேன். தொழுகையென்று சொல்லி ஒரு மார்க்கத்தைத் தாங்கித் தீமையானது பொருந்தும் வண்ணம் பூமியில் விழுந்து எழும்பி யிருந்து எனது சிரமும் புண்ணினா லுலைவடைந்தது. அதனால் துன்பத்தை யடைந்தேன். எனது பந்துக்களையு மிழக்கப் பெற்றேன். ஊழை விலக்குவது எவ்வாறு? ஒருவாற்றானு முடியாது.