பக்கம் எண் :

சீறாப்புராணம்

1499


இரண்டாம் பாகம்
 

விடென்று இத்தன்மையான பலவார்த்தைகளைச் சொல்லித் தலைவாயலிற்போய் அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்களது முன்னிலையில் வந்திருந்தான்.

 

4115.  வஞ்சக னிறுதி கொண்டுவந் திருந்த

          முகம்மது ககுபினை நோக்கி

     மிஞ்சிய நறைசேர் கலவையற் புதமாய்

          வீசுவ தேனென வினவக்

     கொஞ்சிய கிளியிற் கூறுமென் மனையாள்

          கூட்டிய பரிமள மதனை

     யெஞ்சலில் புகழோய் மிடற்றினி லணிந்திங்

          கெய்தினன் வேறிலை யென்றான்.

64

     (இ-ள்) அவ்வாறு வந்திருக்க, வஞ்சகத்தையுடையவனான அந்தக் ககுபென்பவனது முடிவைக் கொண்டு வந்திருந்த அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்கள் அக் ககுபென்பவனைப் பார்த்து அதிகரித்த வாசனையானது பொருந்திய களபமானது ஆச்சரியமாகப் பரிமளிக்கின்றது. இது ஏதென்று கேட்க, அவன் குறையாத கீர்த்தியையுடைய முகம்மதே! இது கொஞ்சா நிற்குங் கிளியைப் போலும் பேசுகின்ற எனது மனைவியானவள் சேர்த்த களபம். அதை எனது கழுத்தின் கண் பூசிக் கொண்டு இவ்விடத்திற்கு வந்தேன். வேறொன்றுமில்லை யென்று சொன்னான்.

 

4116.  அவ்வுரை கேட்டு மனமகிழ்ந் திந்த

          வவனியிற் பரிமள மிவைபோ

     லெவ்விடத் தினுமியான் காண்கில னெளியே

          னெனவெழுந் தடுத்தவ னாவி

     வவ்வுற நினைந்து மோந்துபார்ப் பவர்போல்

          வாள்கொடு வயிற்றிடை வழங்கக்

     குவ்வுற வீழ்ந்தா னாருயிர் துறந்தான்

          குணமில்லாப் பாதகக் கொடியோன்.

65

     (இ-ள்) அவ்வாறு சொல்லிய அந்த வார்த்தைகளை அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்கள் கேள்வியுற்று அகமகிழ்ச்சி யடைந்து எளியேனாகிய யான் இந்தக் கலவைச் சாந்தைப்போல இப்பூமியின் கண் எவ்விடத்திலும் பார்க்க வில்லையென்று சொல்லி எழும்பித் தாங்கிய அவனது பிராணனைக் கவரும்படிக் கருதி மணத்திப் பார்ப்பவர் போல வாளாயுதத்தைக் கொண்டு அவனது வயிற்றின்கண் குத்த குணமற்ற பாவத்தைக் கொண்ட துட்டனான அந்தக் ககுபென்பவன் பூமியிற் பொருந்தும்படி விழுந்து தனது அருமையான ஆவியையொழியப் பெற்றான்.