இரண்டாம் பாகம்
இப்பூலோகத்தி னிடத்தைவிட்டு
வானலோகத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
4166.
ஆவி போதரக் கேளிரும் பிறருமற் றவர்தந்
தேவி மார்களு மக்களு மனையிடஞ் செறிந்து
நாவி னாற்பல விரங்கிமெய் சோர்ந்துள நலிய
மேவு நீர்விழி வழிதரக் கலுழ்ந்தனர் மிகவும்.
9
(இ-ள்) அவ்வாறு அவர்களது
பிராணனானது செல்ல, அவர்களது பந்துக்களும் மற்றவர்களும் அவர்களது மனைவிமார்களும் புத்திரர்களும்
அவர்களது வீட்டின் கண் வந்து நெருங்கித் தங்களது நாக்களினாற் பல வார்த்தைகளைச் சொல்லிக்
கூச்சலிட்டுச் சரீரமானது மெலிவடையப் பெற்று மனஞ் சோரக் கண்களில் நீரானது பொருந்திச் சிந்தும்
வண்ணம் மிகவு மழுதார்கள்.
4167.
வண்டி ரைப்புன லாட்டுவித் துச்சுறு மாவுந்
துண்ட வாண்முகத் துணைவிழி தீட்டிவெண் டூசு
கொண்டு மெய்யுறப் போர்த்தபின் குலத்தவர் குழுமி
யண்டர் போற்றிய நபியுட னெடுத்தன ரன்றே.
10
(இ-ள்) அப்பால் அப்பாத்திமா
றலியல்லாகு அன்ஹா அவர்களை வளமையைக் கொண்ட அலைகளை யுடைய நீரினால் ஸ்நானஞ் செய்வித்து நாசியையுடைய
ஒள்ளிய வதனத்தின் கண் தங்கிய இரு கண்களுக்குஞ் சுறுமாவெழுதி வெள்ளிய வஸ்திரத்தினாற் சரித்திரத்தைப்
பொருந்தும்படி மூடிய பின்னர் அவர்களது பந்துக்கள் ஒன்று சேர்ந்து தேவர்களான மலாயிக்கத்துமார்கள்
துதிக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட்பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடுந் தூக்கினார்கள்.
4168.
மன்னு மோரிடத் தினில்வைத்து வல்லவன் விதித்த
தென்னு மாரண முறைப்படி தொழுவித்தங் கெடுத்தே
யுன்னு மந்திர மெனுங்கலி மாவுரை யொலிப்பத்
தன்னி லியாவருந் துன்புறக் கபுறில்வைத் தனரால்.
11
(இ-ள்) அவ்வாறு தூக்கிப்
பொருந்திய ஒரு தானத்தில் வைத்து எல்லா வல்லமையு முடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் கற்பித்ததென்று
சொல்லும் புறக்கானுல் கரீமென்னும் வேதவொழுங்கின் பிரகாரம் தொழுவித்து அவ்விடத்தை விட்டுந்
தூக்கி யாவராலுங் கருதப்படுகின்ற மந்திரமென்று கூறும் கலிமா வசனமானது முழங்கும் வண்ணம் எல்லாருந்
தங்களில் தாங்களே துயர மடையும்படிக் கபுறில் வைத்தார்கள்.
|