பக்கம் எண் :

சீறாப்புராணம்

1519


இரண்டாம் பாகம்
 

4169.  மருவு லாவிய கபுறில்வைத் திடமுகம் மதுவுள்

     ளுருகி வாடிமெய் சோர்ந்துநெட் டுயிர்ப்பெறிந் திரங்கி

     யருகி னிற்படுத் தங்கையி னாலுற வணைத்துத்

     திருவி ளங்கிய முகத்தொடு முகத்தினைச் சேர்த்தார்.

12

      (இ-ள்) வாசனை பரிமளியா நிற்குங் கபுறில் அவ்வாறு வைக்க, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மனமான திரங்கப் பெற்று வருந்திச் சரீரமெலிந்து பெருமூச்சுவிட்டுக் கசிந்து அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது பக்கத்திற் படுத்து அழகிய கையினாற் பொருந்தும் வண்ணந் தழுவித் தெய்வீக மானது பிரகாசிக்கப் பெற்ற அவர்களது வதனத்தோடுந் தங்கள் வதனத்தைப் பொருத்தினார்கள்.

 

4170.  தந்தை வாட்டமுந் தாயெனும் வாட்டமுந் தவிர்த்துப்

     புந்தி கூர்தர வந்ததா யேயெனப் போற்றிக்

     கந்த மான்மதம் வீசுகுப் பாயத்தைக் கழற்றி

     விந்தை யாம்படி போர்த்தவ ணெழுந்துமண் வீழ்த்தார்.

13

     (இ-ள்) அவ்வாறு பொருத்தி எனது பிதாவினா லுண்டான மெலிவையும் மாதாவென்று சொல்லு மெலிவையு மொழித்து மனமானது சந்தோஷமடையும் வண்ணம் வந்த எனது மாதாவே! என்று சொல்லித் துதித்துக் கஸ்தூரி வாசனையானது பரிமளியா நிற்குந் தங்கள் மேற் போர்வையைக் கழற்றி ஆச்சரிய முண்டாகும்படி அவர்களது தேகத்தில் மூடி அவ்விடத்தை விட்டு மெழும்பி மண்ணைத் தள்ளினார்கள்.

 

4171.  அடுத்து நின்றிடுந் தீனவ ரகுமதை நோக்கிக்

     கடுத்த வெங்குபிர் களைதருங் காரணக் கடலே

     படுத்தெ ழுந்ததும் போர்வையிற் போர்த்ததும் பரிவின்

     விடுத்தி யம்புமென் றுரைத்தலு மவர்விளம் புவரால்.

14

     (இ-ள்) அவ்வாறு தள்ள, பக்கத்தில் நெருங்கி நின்ற தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்கள் அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பார்த்துக் கோபிக்கும் வெவ்விய காபிர்களை யில்லாமற் செய்யுங் காரணமாகிய சமுத்திரமே! நீங்கள் அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது கபுறிற் படுத்து எழும்பினதையும் உங்களது போர்வையினால் அவர்களை மூடினதையும் அன்போடும் வகுத்துச் சொல்லுங்க ளென்று கேட்ட மாத்திரத்தில் அவர்கள் சொல்லுவார்கள்.