பக்கம் எண் :

சீறாப்புராணம்

1520


இரண்டாம் பாகம்
 

4172.  அன்பி னாலுறப் படுத்தது கபுறட ராமற்

     பின்பு தூசினிற் போர்த்தது பிருதவு சிடத்தின்

     மின்பி றந்தவெண் டுகிலினைப் பெறுகவும் வேண்டி

     யின்ப மாயிவை செய்தன னியாதினா லென்றால்.

15

     (இ-ள்) அன்போடும் நான் பொருந்தும்படிப் படுத்தது அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களைக் கபுறானது நெருக்காமலும் பின்னர் எனது போர்வையினால் மூடினது பிருதவு சென்னும் பெயரைக் கொண்ட சொர்க்கத்தி னிடத்து ஒளிவானது பிறக்கப் பெற்ற வெள்ளிய வஸ்திரத்தைப் பெறவும் விரும்பி மகிழ்ச்சியாக இவைகளைச் செய்தேன். அஃது எதனாலென்று கேட்டால்.

 

4173.  அலைத்த டக்குவ லயத்தினிற் றிறங்கெழு மாசீங்

     குலத்து தித்தமங் கையர்க்குமுன் தீனினைக் குறித்து

     நலத்தின் மெய்க்கதி தருமிசு லாமினை நணுகி

     நிலைத்து வெங்குபிர் மதத்தினை நெகிழ்ந்தத னாலும்.

16 

      (இ-ள்) சமுத்திரஞ் சூழ்ந்த பெரிய இந்தப் பூமியினிடத்து வலிமையானது ஓங்கா நிற்கும் ஹாஷீங் குலத்தி லவதரித்த பெண்களுக்கெல்லா முதலாகத் தீனென்னும் மெய்ம்மார்க்கத்தை மனதின் கண் மதித்து நன்மையைக் கொண்ட உண்மைப் பேற்றை யளிக்கின்ற இஸ்லாத்தைச் சார்ந்து அதிற்றானே நிலைபெற்று வெவ்விய குபிர்மார்க்கத்தை விட்டொழிந்ததனாலும்.

 

கலிவிருத்தம்

 

4174.  சரிபுறு கைலலி யென்னுந் தன்மைசேர்

     மாபுகழ் மைந்தர்மூ வரையு மங்கையர்

     தீபமென் றொளிர்சுமா னாவைச் செவ்விசேர்

     தாபர மாமும்மு கானித் தாயையும்.

17

      (இ-ள்) சகுபறு றலியல்லாகு அன்கு, உக்கைல் றலி யல்லாகு அன்கு, அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் தகுதி பொருந்திய பெரிய கீர்த்தியைக் கொண்ட மூன்று புதல்வர்களையும், பெண்களில் தீபமென்று பிரகாசியா நிற்கும் சுமானா றலியல்லாகு அன்ஹா அவர்களையும், யாவர்க்குந் தஞ்சமாகிய அழகு பொருந்திய உம்முஹானி றலியல்லாகு அன்ஹா என்ற மாதாவையும்.

 

4175.  ஈங்கிவை யுரைத்தவை வரையு மீன்றெடுத்

     தோங்கிய வரிசையு முயர்ந்த பேறுமே

     தாங்கிய தாலென தருமைத் தாயர்க்குப்

     பாங்கொடு வரிசையிப் படிசெய் தேனென்றார்.

18