பக்கம் எண் :

சீறாப்புராணம்

1524


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்விதம் போய் மாதர்களது மனத்தை நிகர்த்து அகத்தினிடத்துள்ள அலைகள் நெருங்கிய தடாகங்களையும் நறிய கஸ்தூரி வாசனையானது கமழா நிற்குந் காத்திரத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது மனத்தைப் போலுங் குளிர்ச்சியுற்ற சோலைகளையுஞ் சத்துராதிகளாகிய காபிர்களது மனத்தைப் போலக் கரிந்து அக்கினியானது ஓங்கா நிற்கும் பாலை நிலங்களையுந் தாண்டிப் பொருதுகின்ற சேனாசமுத்திரத்தோடும் நசுதென்று சொல்லுந் தானத்திற்போய்ச் சேர்ந்தார்கள்.

 

4184.  வரையெனச் சிமூ தமென்ன வாகினி யென்ன முன்னீர்க்

     கரையெனப் படங்கு கோட்டிக் கால்படக் கிடந்து லாவித்

     திரையென வொளிர்ந்து செம்மை சிறந்தவெண் கொடிக ணாட்டி

     யரசருக் கரசர் நீண்ட பாசறை யமைத்தா ரன்றே.

7

     (இ-ள்) அவ்வாறு சேர்ந்த அரசராதிபரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மலையைப் போலவும், மேகத்தைப் போலவும், வாகினியைப் போலவும், சமுத்திரக் கரையைப் போலவுங் கூடாரங்கள் வளைத்துக் காற்றானதுண்டாகும்படி கிடந்து உலாவி யலைகளைப் போலப் பிரகாசித்து அழகானது சிறக்கப் பெற்ற வெள்ளிய கொடிகளை நிறுத்தி நீட்சியைக் கொண்ட பாசறை செய்தார்கள்.

 

4185.  திறனிறை பொறையு மொன்றாய்த் திரண்டுரு வென்னத் தோன்றி

     யறன்வழு வாத செங்கோ லகுமது கேள்வ ரோடு

     நறைமலர்த் தடஞ்சூழ் வண்மை நசுதினீண் டினர்க ளென்னக்

     கறைகெழு வடிவேற் செங்கை கத்துபா னவர றிந்தார்.

8

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு செய்ய, இரத்தக் கறையானது ஓங்கா நிற்குங் கூரிய வேலாயுதத்தைத் தரித்த சிவந்த கைகளையுடைய கத்துபான் கூட்டத்தார்கள் வலிமையுந் தைரியமும் பொறுமையு மொன்றாகத் திரண்டு ஓர் வடிவத்தை யெடுத்தாற் போலுந் தோற்றித் தருமத்தில் நின்றுந் தவறாத செங்கோலைக் கொண்ட அஹ்மதென்னும் திருநாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்க ளுறவினரான சஹாபாக்களோடும் வாசனையைக் கொண்ட புஷ்பங்களை யுடைய தடாகங்கள் சூழ்ந்த வளமை பொருந்திய நசுதென்னுந் தானத்தில் வந்து கூடினார்களென்று தெரிந்தார்கள்.