பக்கம் எண் :

சீறாப்புராணம்

1525


இரண்டாம் பாகம்
 

4186.  ஆங்கவ ருணர்ந்து சேனை யனைவரு மொருங்கிற் கூடித்

     தாங்கரு மயில்வாள் குந்தஞ் சக்கரம் பரிசை தண்ட

     மீங்கிவை யாவு மேந்தி யியம்பல வார்ப்ப மற்றோர்

     பாங்கில்வந் திறுத்தார் வெய்யோன் கரமெதிர் பனிவந் தென்ன.

9

      (இ-ள்) அவ்விடத்தில் அவ்வாறு தெரிந்து சைனியமாகிய அந்தக் கத்துபான் கூட்டத்தார்க ளியாவரு மொன்றாய்ச் சேர்ந்து இங்கே தாங்குதற் கருமையான வேல், வாள், குந்தம், சக்கரம், பரிசை, தண்டமாகிய எல்லா ஆயுதங்களையுந் தாங்கிக் கொண்டு பலவாச்சியங்க ளொலிக்கும் வண்ணம் வேறொரு தானத்திற் சூரியகிரணங்களுக்கு முன்னர்ப் பனிவந்ததைப் போலும் வந்து தங்கினார்கள்.

 

4187.  முனைப்பதி யமைத்துக் காபிர் மொய்த்திவ ணிருக்கு மெல்வைக்

     குனிப்புறுஞ் சிலைக்கை தீன ரியாவருங் குழுமி நிற்பத்

     தனிப்பிறை யழைத்து முன்னஞ் சாற்றிய விறசூ லென்று

     நினைப்பரும் பொருளை யேத்தி லுகறினைத் தொழுது நின்றார்.

10

     (இ-ள்) காபிர்களாகிய சத்துராதிகள் அவ்வாறு நெருங்கிப் பாடி வீடு செய்து இங்கே யிருக்கின்ற காலத்தில் வளைத்தலைப் பொருந்திய கோதண்டத்தைத் தாங்கிய கையையுடைய தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தைப் பெற்ற முஸ்லிம்க ளனைவரு மொன்றாகச் சேர்ந்து மௌனமாக நிற்க, ஒப்பற்ற சந்திரனை வரவழைத்து அதன் முன்னர்ப் பேசிய தூதராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இமாமாக நின்று எக்காலத்தும் நினைத்தற் கருமையான வத்துவாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவைப் புகழ்ந்து லுகறுத் தொழுகையைத் தொழுதார்கள். 

 

4188.  அவ்வள வயினோர் வீர னழுக்குறு மனத்தன் தீனர்

     செவ்விதி னோக்கி நிற்குஞ் செயலறிந் துவகை பூத்து

     வெவ்வினைத் தொகுதி முற்றும் வேரறக் களைதற் கின்னே

     கவ்வைவந் துதவிற் றென்னக் கட்கடை சிவந்த போனான்.

11

      (இ-ள்) அந்த வரையறையான காலத்தில் அவ்விடத்தில் அவ்வாறு தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தை யுடைய முஸ்லிம்கள் செவ்வையாகப் பார்த்து நிற்குஞ் செய்கையை களங்கமுற்ற மனத்தை யுடைய காபிராகிய ஓர் வீரன் தெரிந்து மகிழ்ச்சியானது அதிகரிக்கப் பெற்றுத் தீத்தொழிலாகிய கூட்டங்க