பக்கம் எண் :

சீறாப்புராணம்

1527


இரண்டாம் பாகம்
 

4192.  அன்னது கேட்ட வீர ரணிமுடி துளக்கி யாகத்

     துன்னியித் தீனர் தங்க ளூழ்முடி வுணர்த்திற் றென்னப்

     புன்னினை வதனை யுற்றுப் பொருக்கென வெழுந்தா ராங்கு

     மன்னிய பறுலென் றேத்தும் வணக்கமு முடிந்த தன்றே.

15

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, அச்சமாச்சாரத்தைக் கேள்வியுற்ற வீரர்களாகிய அந்தக் காபிர்கள் தங்களது அழகிய தலைகளை யசையும்படி செய்து மனதின்கண் ஆலோசித்து இந்தத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களது ஊழானது அதனிறுதியை யறிவித்ததென்று சொல்லி இழிந்த எண்ணத்தை யடைந்து பொருக்கென்று எழும்பினார்கள். அவ்விடத்தில் நிலைபெற்ற பறுலென்று சொல்லித் தொழுந் தொழுகையும் நிறைவேறியது.

 

4193.  மண்ணினிற் படிந்தெ ழுந்த வணக்கமு முடிந்த பின்னர்

     கண்ணினா லுணர்ந்து மேன்மேற் கருத்தழிந் துவகை போக்கித்

     தண்ணளி யில்லா நெஞ்சர் சஞ்சலத் தழுங்கி நின்றா

     ரெண்ணிய படியே கைவந் தெய்துமோ வெளிதி னம்ம.

16

     (இ-ள்) பூமியின்கண் தோய்ந்து எழும்பிய தொழுகையும் அவ்வாறு நிறைவேறிய பின்னர்க் குளிர்ந்த அன்பானது இல்லாத மனதையுடைய அந்தக் காபிர்கள் அதைத் தங்கள் கண்களினாற் பார்த்துத் தெரிந்து மேலும் மேலும் சிந்தனையானது அழியப் பெற்றுச் சந்தோஷத்தை யொழித்துக் கவலையினால் வருந்தி நின்றார்கள். நினைத்த வண்ணமே வந்து இலகுவிற் கைகூடுமோ? கூடாது.

 

4194.  துனிகிடந் துழன்ற வஞ்சச் சூதரி லொருவ னாளும்

     வினையமுண் ணிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கு நீரான்

     மனவலி யுடையீர் முற்று மதிமறந் துடைவ தென்கொ

     லினியன மாற்ற மொன்று கேண்மினென் றியம்பு வானால்.

17

      (இ-ள்) அவ்வாறு துன்பத்திற் கிடந்து வருந்திய கபடத்தை யுடைய சூதர்களாகிய காபிர்களி லொருவனும் பிரதி தினமும் வஞ்சகமே மனதின்கண் நிரம்பி நின்றவனும் உபாயங்களையே செய்கின்ற குணத்தை யுடையவனுமான ஒருவன் அந்தக் காபிர்களைப் பார்த்து மனவல்லமை யுடையவர்களே! நீங்கள் உங்கள் அறிவை முழுவதும் மறந்து தளர்வது யாதுகாரணம்? இனிமையை யுடையதாகிய ஒரு சமாச்சாரத்தைக் கேளுங்க ளென்று சொல்லுவான்.