இரண்டாம் பாகம்
4267.
ஈங்கு வஞ்சினங் கூறிய சொற்படி யெழுந்து
நீங்கி லாதகா னியாறும்வெம் பாலையு நீந்தித்
தீங்கு றாதியா னேகிய நெறியினில் தீனோ
ராங்கி யாவருந் துயில்வது காண்டக மகிழ்ந்தேன்.
90
(இ-ள்) நான் இவ்விடத்திற்
சொல்லிய சபதவார்த்தையின் பிரகாரம் எழும்பி மாறாத கான்யாறுகளையும் வெவ்விய பாலை நிலங்களையுங்
கடந்து யாதொரு தீமையும் வந்து சாராமற் சென்ற பாதையின்கண் அந்தத் தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தையுடைய அவர்க ளனைவரும் நித்திரை செய்வதைப் பார்த்து மனமானது சந்தோஷ மடையப் பெற்றேன்.
4268.
தேட ரும்பொரு ளடித்தலத் திடறிய திறம்போ
னாடி யின்றிவர் தமைத்தெற வருநட வையினிற்
கூடும் வல்வினை மூட்டிய திவணெனக் குறிக்கொண்
டாடல் வென்றிசே ரகுமது துயிலிட மடுத்தேன்.
91
(இ-ள்) அவ்வாறு சந்தோஷ
மடையப் பெற்றுத் தேடிப் போன அரிய பொருளானது பாதத்தி னிடத்துத் தட்டிய தன்மையைப் போலும்
நாம் இன்று விரும்பி இவர்களைக் கொல்ல வருகின்ற பாதையின்கண் கூடா நிற்கும் இவர்களது வலிய
ஊழானது இவ்விடத்தில் மூளச்செய்த தென்று மனதின்கண் மதித்துக் கொண்டு போராட்டத்தின் வெற்றியானது
பொருந்தப் பெற்ற அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய அந்த முகம்மதென்பவர் நித்திரை செய்கின்ற
தானத்தின்கண் போய்ச் சேர்ந்தேன்.
4269.
தருவிற் சாத்திய வாளினைத் தடக்கரத் தேந்திக்
கரிய வள்ளுறை கழித்தலுந் தூதர்கண் விழித்துத்
தெரிய நோக்கினர் நோக்கலுங் கரதலந் திருகி
யிருநி லத்திடை விழுந்தது நாந்தக மிமைப்பின்.
92
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து
அங்கே ஒரு மரத்தின் மீது சாத்தியிருந்த வாளாயுதத்தை யான் எனது பெருமை பொருந்திய கைகளினால்
தாங்கிக் கருநிறத்தைக் கொண்ட வாரினாலான அதன் உறையை நீக்கிய வளவில் றசூலாகிய அந்த முகம்மதென்பவர்
நித்திரையை விட்டும் விழித்து என்னை விளங்கும்படி பார்த்தார். அவ்விதம் பார்த்த மாத்திரத்தில்
அவ்வாளானது ஓரிமைப்பொழுதில் எனது கையின் தானத்தைத் திருகிக் கொண்டு பெரிய இப்பூமியின்கண்
விழுந்தது.
4270.
கண்ட கத்தையம் முகம்மது திருச்செழுங் கரத்திற்
கொண்ட டர்த்திடத் தெருமந்து மருண்டுளங் குழைந்து
மண்ட லத்திலென் பிழைதவிர்த் திடுகென வணங்கி
விண்டு ரைத்தன னவைபொறுத் திருத்தினர் மேலோர்.
93
|