பக்கம் எண் :

சீறாப்புராணம்

1558


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அரசராகிய நபிகட் பெருமானே! அவர் அவ்வாறு மவுத்தாக, அந்த எகூதிக ளென்னிடத்தில் வந்து கூடி விரைந்து பாய்ந்து ஓங்கா நிற்கும் அந்தக் கடன் றொகையைக் கொடுவென்று கேட்டார்கள். அதற்கு அடியேனாகிய யான் உங்கள் முதலை வாங்கிக் கொள்ளுங்களென்று சொல்ல, ஆதியின் சொன்ன சொற்பிரகாரங் கொடுவென்று சொல்லித் திடன் கொண்டு என்னை மறித்து நின்றார்கள். இந்த வருடத்தில் எனக்கு வந்த பழமுங் கொஞ்சம்.

 

4288. பலிசையு முதலு நூற்றைம் பதின்கல மாகு மெண்ணி

     வலைவிலா வாண்டு நான்கி னாயினு மருள மாட்டேன்

     மலிதரு காட்சி யெய்தி வானுளு நடந்த மேலோய்

     மெலிவுளே னலிதன் மாற்ற வேண்டுமென் றிதனைச் சொன்னார்.

4

     (இ-ள்) ஓங்கா நிற்குங் காட்சியைப் பெற்று வான லோகத்தின் கண்ணும் நடந்து சென்ற மேன்மையை யுடைய நபிகட் பெருமானே! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பலிசையு முதலும் நூற்றைம்பது கலப் பழமாகும். இதைப் பற்றி ஆலோசித்தால் நான்கு வருடமானாலுந் துன்பமின்றி இத்தொகையைக் கொடுக்க வல்லே னல்லேன். ஆதலால் வாட்ட முள்ளேனாகிய எனது வருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்று இந்தச் சமாச்சாரத்தைச் சொன்னார்கள்.

 

4289. வரையகத் திருந்து பேறும் வரிசையும் பெற்ற வள்ளல்

     புரையட ரெகூதி யென்னும் புன்மையோர் தம்மைக் கூவி

     பரிவுடன் கடமை முற்றும் பற்றுமின் பொறையி னென்ன

     வுரைதர விதயத் தெண்ணா மறுத்தன ருணர்வி லாதார்.

5

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, மலையினுள் ளிருந்து பதவியுஞ் சிறப்பு மடைந்த வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குற்றமானது நெருங்கப் பெற்ற எகூதியென்று சொல்லும் அந்தக் கீழ்மை யுடையோர்களைக் கூப்பிட்டு நீங்கள் அன்போடும் உங்கள் கடன்றொகை முழுவதையும் பொறுமையுடன் வாங்கிக் கொள்ளுங்களென்று சொல்ல, அறிவற்றவர்களான அந்த எகூதிகள் அவ்வார்த்தையை மனதின்கண் மதியாமல் வாங்கமாட்டோ மென்று சொல்லி மறுத்தார்கள்.

 

4290. அறத்தினைத் திரட்டி வேறோ ராணுரு வமைத்த தென்னுந்

     திறத்தின ராதி தூத ருயிரெனச் சிறந்த கேளிர்

     புறத்திடை சூழச் சாபிர் பொறிவரி வண்டு கிண்ட

     வெறித்துணர்த் தாது துன்றும் வேரியஞ் சோலை புக்கார்.

6