பக்கம் எண் :

சீறாப்புராணம்

1604


இரண்டாம் பாகம்
 

அசுஹாபிமார்கள் இஃது என்ன காரணமென்று சோர்ந்து இருகரங்களுஞ் செந்நிறமடைய இளைத்தோய்ந்தார்கள். புயங்களுடன் பாதங்களிலுஞ் சரீரத்திலும் வியர்வையானது ஓங்கும்படி இளைத்தோய்ந்தார்கள். வாடி மனமானது மேலும் மேலும் நையும் வண்ண மிளைத்தோய்ந்தார்கள்.

 

4408. ஆன காலையி னாதமின் முதுகினி லமர்ந்த

      வான நாயகம் வையக நாயக மதித்த

      தீனர் நாயக மியாவர்க்கு முதலவன் றிருமுன்

      போன நாயகம் வந்தன ரறந்தவம் புகழ.

53

     (இ-ள்) அவ்வாறாயின சமயத்தில், மூலபிதாவான நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்களது முதுகின் கண் தங்கிய தேவலோகத்திற்கு நாயகமும், பூலோகத்திற்கு நாயகமும், யாவராலும் மதிக்கப்பட்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய முஸ்லிம்களுக்கு நாயகமும், அனைவருக்கும் முதன்மையனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் தெய்வீகந்தங்கிய சந்நிதானத்திற் சென்று நாயகமுமான நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் புண்ணியமும் தவமும் புகழும் வண்ணம் அங்கு வந்தார்கள்.

 

4409. நோக்கி னார்கரும் பாறையை யிறுகநூற் கலையை

     வீக்கி னார்செழுங் கரத்தினில் விளங்குகூந் தால

     மாக்கி னார்பருப் பதத்தில்வீ ழிடியினு மதிரத்

     தாக்கி னார்நெடும் பேரொலி திசைதொறுந் தழைப்ப.

54

     (இ-ள்) அவ்வாறு வந்து கரிய கல்லினாலான அந்தப் பாறையைக் கண்களாற் பார்த்தார்கள். உடனே பஞ்சிநூலினாற் செய்யப்பட்ட வஸ்திரத்தை அரையிலிறுகும் வண்ணங் கட்டினார்கள். விளங்கா நிற்குங் கூந்தாலியைச் செழிய கையினிடத்து ஆக்கினார்கள். மலைகளின்கண் வீழா நிற்கும் இடியைப் பார்க்கிலு மதிகமாய் முழங்கவும், நீண்ட பெரிய ஓசையானது எண்டிசைகளிலுஞ் சென்று ஓங்கவும், வெட்டினார்கள்.

 

4410. கரமெ டுத்தெறிந் திடுதலுங் ககனவெண் முகடும்

     வெருவல் கொண்டன பயந்தன வொளித்தன மேக

     மரவின் வேந்தனுந் தரையொடு மசைத்தன னென்னிற்

     பெரிய பாறையிங் கென்படு மியானெவன் பேசல்.

55