பக்கம் எண் :

சீறாப்புராணம்

1605


இரண்டாம் பாகம்
 

      ( இ-ள்) அவ்வாறு அவர்கள் தங்கள் கையைத் தூக்கி வீசினமாத்திரத்தில், வெண்ணிறத்தை யுடைய ஆகாயத்தினது உச்சியும் அச்சத்தைக் கொண்டன. மேகங்க ளஞ்சி மறைந்தன. சர்ப்பராஜனான ஆதிசேடனும் தனது சரீரத்தைப் பூமியோடும் அசைத்தானென்றால் பெரிய அந்தக் கற்பாறையானது இவ்விடத்தில் என்ன பாடுபடும்? அதைப்பற்றி யான் யாது சொல்லுவேன். சொல்லுவ தொன்றுமில்லை.

 

4411. பதலை மேலேறி படப்பிளந் தனவரும் பகுப்பிற்

     சிதறித் துண்டங்க ளாயின தீப்பொறி தெறிப்பப்

     பிதிர்விட் டோடின தகர்ந்தன நுறுங்கின பெருந்தூ

     ளிதெனப் போயின வள்ளறங் கரத்தினா லெல்லாம்.

56

     (இ-ள்) அக் கற்பாறையின் மீது அவ்வாறு வீச, வீச்சானது பொருந்த, அது முழுவதும் வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது கையினால் அரிய பகுப்புகளாகப் பிளந்தன. சிதறி துண்டகளாயின. அக்கினிப் பொறியானது சிந்தும் வண்ணம் பொடிகளாகிய நானா திசையுமோடின. நெரிந்தன. நொறுங்கின. பெரியதூளானது இஃதென்று சொல்லும் வண்ணம் போயின.

 

4412. மண்டு தூளென வகுத்தமே லவரடி வயிற்றில்

     விண்ட வெம்பசி யாலொரு கல்லினை வீக்கிக்

     கொண்டு நின்றன ரன்னது குறிப்பினிற் சாபிர்

     கண்டு தேம்பினர் சலித்தனர் நிறைமனங் கலங்கி.

57

     (இ-ள்) அவ்வாறு அதிகரித்த தூள்களென்று சொல்லும் வண்ணஞ் செய்த மேன்மையை யுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விரிந்த வெவ்விய பசியினால் தங்களது அடிவயிற்றில் ஒருகல்லைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். அதைச் சாபிர் றலியல்லாகு அன்கு அவர்கள் குறிப்பாகப் பார்த்து உறுதியைக் கொண்ட தங்களது மனமானது கலக்கமுறப் பெற்று மெலிந்து வருந்தினார்கள்.

 

4413. கல்ல கட்டினி லமைத்தது காண்டுமிங் கிருந்தோர்க்

     கல்ல லெய்துமென் றுணர்ந்தவ ணீந்திவா ழழகி

     னில்லம் புக்கினர் மனைவியர்க் குரைத்தன ரெளிதி

     னல்ல தாம்படி விருந்தொன்று கொடுத்திட நயந்தே.

58