பக்கம் எண் :

சீறாப்புராணம்

1607


இரண்டாம் பாகம்
 

முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் களங்கமற்ற அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்களது செழியவதனத்தைப் பார்த்து வளைக்கா நிற்கும் வெவ்விய கோதண்டத்தை யுடைய அசுஹாபிமார்களோடு யான் வரும் வரையும் இளமைப் பருவத்தைப் பொறுத்த திரண்ட அவ்வாட்டினது இறைச்சியுடன் நுண்ணிய மாவையும் சமையாமல் அங்கே வைத்திருங்க ளென்று சொன்னார்கள்.

 

4417. நன்றெ னத்தனி போயினர் மனையினி னபியும்

     வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த

     வன்றி றத்தவ ரெவரையு மருங்கினிற் கூட்டிச்

     சென்று புக்கின ரிருந்தனர் வயின்வயின் சிறப்ப.

62

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அந்தச் சாபிர் றலியல்லாகு அன்கு அவர்களும் நல்லதென்று சொல்லி ஒப்பறத் தங்கள் வீட்டின் கண் சென்றார்கள். நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா செய்யிதுல் குறைஷியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் விஜயத்தைக் கொண்ட அரசர்கள் சிறியோர்கள் பெரியோர்கள் முதிர்ந்த வன்மையைப் பொருந்திய திறத்தை யுடைய அசுஹாபிமார்களான யாவரையும் தங்கள் பக்கத்திற் சூழ்ந்துவரும் வண்ணங் கூட்டிக் கொண்டு நடந்து அங்கே போய்ச் சேர, யாவரும் இடங்களெல்லாவற்றிலுஞ் சிறக்கும் வண்ண முட்கார்ந்தார்கள்.

 

4418. எண்ணி னாயிர மரசரு மேவலி னேய்ந்த

     திண்ண வீரரு முறைமுறை தெரிதர விருப்ப

     விண்ணு மேத்திட வொளிதரு கபீபெனு மேலோ

     ருண்ணு மாரமு திவ்விடங் கொணர்கென வுரைத்தார்.

63

     (இ-ள்) கணக்கினா லாயிரம் மன்னவர்களும் ஏவற் றொழிலிற் பொருந்திய வலிமையைக் கொண்ட வீரர்களும் வரிசை வரிசையாகத் தெரியும்படி அவ்வாறிருக்க, தேவலோகமும் புகழும் வண்ணம் பிரகாசத்தைத் தரா நிற்கும் ஹபீபென்னுங் காரணப் பெயரை யுடைய மேலோர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அருந்தும் அருமையான உணவை இங்கே கொண்டு வாருங்க ளென்று சொன்னார்கள்.

 

4419. புலவும் பிண்டியு முன்னரி னமைத்தனர் பொருவாக்

     கலைநி லாவொளித் தூதுவர் நோக்கினர் கதிர்வா

     யுலவு மாரமு துகுத்தனர் பின்னரி னுவந்து

     நிலைமை மன்னவ வீதடு கெனநிகழ்த் தினரால்.

64